கோலாலம்பூர்:
காராக் நெடுஞ்சாலையில் (Karak Highway) இன்று அதிகாலை சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சிமெண்ட் லோரியின் பின்புறம் பயங்கரமாக மோதியதில், காரில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் காராக் நெடுஞ்சாலையின் 34-ஆவது கிலோமீட்டர், கம்போங் சுங்கை சின்ச்சின் (Kampung Sungai Chinchin) பகுதிக்கு அருகே இந்த அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்துள்ளது.
இக்கோர விபத்து குறித்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், இன்று அதிகாலை 2.07 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர விபத்து அழைப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, செலாயாங் (Selayang) தீயணைப்பு நிலையத்திலிருந்து மீட்புப் படையினர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றார்.
அதிகாலை 2.35 மணியளவில் விபத்து நடந்த இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள், மோதிய வேகத்தில் சிமெண்ட் லாரியின் அடியில் சிக்கி அப்பளமாக நொறுங்கிய காரின் உள்ளே நான்கு பேர் உடல் நசுங்கிப் பலத்த காயங்களுடன் சிக்கியிருந்ததைக் கண்டறிந்தனர்.
சம்பவ இடத்தில் மரணம்: காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 20 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்களை மீட்டபோது, அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்த சுகாதார அமைச்சின் (KKM) மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
காரில் இருந்த 27 வயதுடைய இளம் பெண் ஒருவருக்குத் தலையில் மிகக் கடுமையான காயங்களும், இடது காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தீயணைப்பு வீரர்களின் தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, காரின் இடிபாடுகளை வெட்டி எடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களும், காயமடைந்த பெண்ணும் வெற்றிகரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர். பின்னர், உடல்கள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காகப் போலீசாரிடமும் சுகாதார அமைச்சிடமும் ஒப்படைக்கப்பட்டன.
இவ்விபத்து மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் அதிகாலை 3.15 மணியளவில் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்துப் பிரிவு போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




