ஆனால், இந்த வெற்றி, இந்த சாதனை, இந்த பெருமை, இந்த வரலாறு இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் அளவுக்கான வரவேற்பு மகளிர் கிரிக்கெட்டிற்கு இல்லாத சூழலில் தற்போது நாங்களும் இருக்கிறோம் என்பதை நெற்றிப்பொட்டில் அறைந்தவாறு அழுத்தம் திருத்தமாக அடித்துக் காட்டியிருக்கின்றனர் இந்திய வீராங்கனைகள். ஒரு கனவுடன் தொடங்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயணம், ஓயாத நம்பிக்கையுடன் தொடர்ந்து இன்று வரலாறு சாதனையாக மிளிர்கிறது.
1983-ஆம் ஆண்டு இந்தியாவுக்காக கபில்தேவ் தலைமையிலான அணி வென்றெடுத்த முதல் உலகக் கோப்பை எப்படி இந்தியாவில் கிரிக்கெட்டை மதமாக மாற்றியதோ அதே கிரிக்கெட் புரட்சியை மகளிர் கிரிக்கெட்டில் விதைத்திருக்கிறார் ஹர்மன்ப்ரீத் கவுர். இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கும் இந்திய மகளிர் அணிக்கு விதை போட்டவர்களில் ஒருவர் மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் என புகழப்படும் மிதாலி ராஜ். இந்த மிதாலி ராஜின் தாயும், தந்தையும் தமிழர்கள் என்பது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை.
ஆண்கள் உலகக்கோப்பை தொடர்களை தொடங்குவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக, 1973-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது மகளிர் உலகக் கோப்பை போட்டிகள். ஆனால், மகளிர் உலகக் கோப்பை தொடங்கப்பட்டு 22 ஆண்டுகளுக்குப் பிறகு 2005-ஆம் ஆண்டு மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
அப்போதுதான், இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் அணி என்று ஒன்று இருக்கிறது என்பதே பலரது கண்களுப்பு புலப்பட்டது.
ஆனால், அந்த இறுதிப் போட்டியில், மகளிர் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்திய அணி. அன்றைக்கு இந்திய மகளிர் அணிக்கு ஏமாற்றம் கிடைத்தாலும், அதுவே பிந்நாளில் ஏற்றத்திற்கான தொடக்கப் புள்ளியாக அமைந்தது என்றால் மிகையாகாது. உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்திய மகளிர் அணியின் கனா அப்போது விதைக்கப்பட்டது .
அந்த கனவை நோக்கி அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் ஓயாது ஓடினர். 2009- உலகக் கோப்பை தொடரில் 3-ஆவது இடம் பிடித்த இந்திய அணி, 2013-இல் குரூப் சுற்றிலேயே வெளியேறியது. ஆனால், 2017-ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து, இறுதிப்போட்டி வரை சென்றது.
ஆனால், லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியிடம் போராடி தோல்வியடைந்தது. மீண்டும் ஒருமுறை கோப்பை வாய்ப்பு பறிபோன நிலையிலும், இந்திய அணியின் கனவு மட்டும் கலையாமல் மேலும், மேலும் உறுதியடைந்து கொண்டிருந்தது. 2022-ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரிலும் குரூப் சுற்றிலேயே இந்திய மகளிர் அணி வெளியேறியது. இதையடுத்து, தற்போது, இந்தியாவில் உலகக்கோப்பை நடந்ததால், எப்படியாவது கோப்பையை வசப்படுத்திவிட வேண்டும் என இந்திய வீராங்கனைகள் பெரும் உத்வேகத்துடன் களமிறங்கினர்.
8 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், 7 போட்டியில் விளையாடிய இந்திய அணி, இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய நிலையில், வங்கதேசத்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது. மேலும், கிரிக்கெட் ஜாம்பவான்களாக இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடமும், தென் ஆப்பிரிக்காவுடனும் இந்திய அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தது.
இதனால், லீக் சுற்றில் கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. கட்டாய வெற்றியை நோக்கி எதிர்நோக்கி இருந்த இந்திய அணிக்கு, ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் ஆகிய இருவரும் அபாரமாக சதமடிக்க, அந்த போட்டியை வென்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது இந்திய அணி.
ஆனால், அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக வந்து நின்றது 7 முறை உலக சாம்பியான ஆஸ்திரேலியா. சிறு தடுமாற்றத்துடன் அரையிறுதியை எட்டிய இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்தது. அதற்கு ஏற்ற வகையில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 339 ரன்களை குவிக்க பலர் நம்பிக்கையே இழந்திருந்தனர்.
காரணம், ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதற்கு முன்பாக, இந்திய மகளிர் அணி சேஸ் செய்திருந்த அதிகபட்ச ஸ்கோர் 265 மட்டுமே. ஆனால், புதிய வரலாறு படைக்கப் போகும் எங்களுக்கு பழைய வரலாறுகள் தேவையில்லை என வீறுகொண்டு எழுந்தது இந்திய அணி. எவ்வளவு பெரிய ஜாம்பவானையும் பார்த்து பயப்படுபவர்கள் நாங்கள் இல்லை என்பதைப் போல, அசகாயச சூரிகளாக மாறி ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்தனர் இந்திய வீராங்கனைகள்.
ஜெமிமா ரோட்ரிஸ் 127 ரன்கள் விளாச, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 89 ரன்கள் அடிக்க வீழ்த்தவே முடியாது என கூறப்பட்ட ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி. அதன்பின் நடந்த வரலாற்று சாதனை அனைவருக்கும் தெரிந்ததே.
November 03, 2025 7:26 AM IST

