Last Updated:
LIC-யில் மட்டும் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 20 சதவீதமாகத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய காப்பீடு துறையில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் காப்பீட்டுத் துறையை வளர்ச்சி அடையச் செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது.
அதன்படி, காப்பீடு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்தில் இருந்து நூறு சதவீதமாக உயர்த்த முடிவெடுத்தது.
இதற்காக காப்பீட்டுச் சட்டங்கள் திருத்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
பின்னர், இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், தற்போது அரசாணை வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்திய காப்பீடு துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீடு செய்ய இனி அரசின் முன் அனுமதி தேவையில்லை. எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை தொடங்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வாங்கலாம்.
காப்பீடுதாரர்களுக்கு உடனடி பலன் கிடைக்காது என்றாலும் அடுத்த சில ஆண்டுகளில் 15 சதவீதம் வரை காப்பீட்டு பிரீமியங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை மற்றும் வங்கி துறையைப் போலவே மிகப்பெரிய மாற்றத்தை காப்பீடு துறையிலும் கொண்டுவரும் என அரசு நம்புகிறது.
அதேநேரம் LIC-யில் மட்டும் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 20 சதவீதமாகத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi


