Last Updated:
பெங்களூருவில் கல்லூரியில் அத்துமீறிய பேராசிரியரை மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவத்தின் பின்னணி என்ன?
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வகுப்பறையில் பேசும்போது, மருத்துவ மாணவி ஒருவர் தன்னை காதலிப்பதாகக் கூற, வெகுண்டெழுந்த மாணவி மற்றும் மாணவர்கள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அத்துமீறிய பேராசிரியரை சுற்றி வளைத்து தாக்கிய சம்பவத்தின் பின்னணி என்ன?
கர்நாடக மாநிலம் பெங்களூரு, நெலமங்கலா அருகே டி.பேகூரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதன்கிழமை ஒரு பேராசிரியர் வகுப்பறையில் பேசியபோது, கல்லூரி மாணவி ஒருவரிடம் தன்னுடைய காதலைத் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்த மாணவியோ கடும் ஆத்திரம் அடைந்து, அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், பேராசிரியரோ அந்த மாணவி முன்பே தன்னை காதலிப்பதாக கூறியதாகவும், தானும் அந்த மாணவி மீது காதல் கொண்டிருந்ததாகவும் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் கூறியிருக்கிறார்.
இதனால், கடும் கோபமடைந்த அந்த மாணவி நான் எப்போது அப்படி கூறினேன் என்று கேள்வி எழுப்ப, அதற்கு பேராசிரியர் ஐ லவ் யூ என்று நீ சொல்லவில்லையா? என மீண்டும் மீண்டும் கூறி வெறுப்பேற்றி இருக்கிறார். மேலும், தனது கூற்றை நிரூபிக்க தன்னிடம் சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
இதனால், வெகுண்டெழுந்த அந்த மாணவி அந்த சிசிடிவி காட்சியை தன்னிடம் உடனே காட்டுமாறு வலியுறுத்தியுள்ளார். உடனே பதுங்கிய அந்த பேராசிரியர், மறுநாள் பேசுவதாக கூறிவிட்டு, ஒரு அட்டைப் பெட்டி நிறைய சாக்லெட்டுகளை கொடுத்து, மாணவர்களைச் சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டு வகுப்பறையிலிருந்து வெளியேறினார். அவர் வகுப்பறையை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.
கல்லூரி முழுவதும் காட்டுத்தீயாக பரவிய இந்த சம்பவத்தால் மாணவர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். பேராசிரியரை கார் பார்க்கிங்கில் சுற்றி வளைத்த மாணவர்கள், அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். ஒரு கட்டத்தில் அந்த மாணவி தனது காலணியை எடுத்து பேராசிரியரின் கன்னத்திலேயே பளார் என அடித்துள்ளார்.
கொந்தளிப்பாக இருந்த மற்ற மாணவர்களும் அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால், அந்த பேராசிரியர் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். இந்தச் சம்பவம் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள நெலமங்கலா ஊரக காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குள் நிகழ்ந்துள்ளது. மாணவர்கள் தங்களது செல்போன்களில் எடுத்த வீடியோக்களால், தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுவரை மாணவர்கள் தரப்பிலிருந்தும், பேராசிரியரிடமிருந்தும் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
Bangalore,Karnataka


