Last Updated:
காதல் திருமணம் செய்த பெண் மூன்று மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் காதல் திருமணம் செய்த இளம்பெண், மூன்று மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் 23 வயதான யாஸ்மின் பானு. இவர், பூதலப்பட்டு பகுதியை சேர்ந்த 25 வயதான சாய் தேஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை பொருட்படுத்தாத காதல் ஜோடி, கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர், நெல்லூரில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, திருப்பதியில் உள்ள முத்யாலாரெட்டிபள்ளி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அப்போது, காவல் நிலையத்திற்கு யாஸ்மின் பானுவின் பெற்றோரை வரவழைத்து, போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். பின்னர், சாய் தேஜ் – யாஸ்மின் பானு இருவரும் நெல்லூரில் தனியாக வசித்து வந்தனர். காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும், யாஸ்மின் பானுவின் பெற்றோர், அடிக்கடி செல்போனில் அன்பாக பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் சாய் தேஜுக்கு போன் செய்த பெண்ணிண் பெற்றோர், தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளனர். அதனால், தங்களது மகளை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மனைவியை காரில் சித்தூருக்கு சாய் தேஜ் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் செய்வாய்க்கிழமை அன்று யாஸ்மின் பானு வீட்டில் திடீரென இறந்துவிட்டதாக கூறி, அவரது பெற்றோர் சாய் தேஜுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதைக் கேட்டு அதிர்ச்சிடைந்த சாய் தேஜ், தனது மனைவியில் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி சித்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது மனைவியை அவரது பெற்றோர் கொலை செய்து விட்டு, நடகமாடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உடற்கூராய்வு முடிவில் தான் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மதம் மாற்று திருமணம் செய்த மூன்று மாதத்தில், தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
April 16, 2025 6:01 PM IST
காதல் திருமணம்.. பாசமாக கூப்பிட்ட பெற்றோரை நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கணவன் அதிர்ச்சி!


