பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார். எலக்ட்ரீசியின் வேலை செய்து வந்த இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்துள்ளார். இணையமே கதி என்று இருந்தவருக்கு ஏற்ப உத்தர பிரதேசம் மாநிலம் கோண்டா பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஷீலா தேவி என்பவர் அறிமுகமாகியுள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாவில் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
பின்னர் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகமானதும் ஊர் விட்டு ஊர் சென்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். அவர்களின் ரீல்ஸ் வீடியோக்களுக்கு லைக்ஸ் அள்ளியதால் அதன் மூலம் காசு பார்த்துள்ளனர். இந்த நிலையில் கோண்டாவில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கரும்புக் காட்டுக்குள் தலை துண்டிக்கப்பட்ட இளம்பெண்ணின் சலடலம் கிடந்துள்ளது. தலை கிடைக்காததால் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பின்னர், காணாமல் போனவர்களின் தகவலை சேகரித்து விசாரித்ததில் அது இன்ஸ்டா பிரபலம் ஷீலா தேவி என்பது தெரியவந்தது. இதையடுத்து கடைசியாக எடுத்த இன்ஸ்டா வீடியோ மூலம் அவரின் காதலன் அருண் குமாரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் பதைபதைக்க வைத்த சம்பவம் அம்பலமானது. அருண் குமாரும், ஷீலா தேவியும் சேர்ந்து விதவிதமாக ரீல்ஸ் வீடியோ எடுத்து கல்லா கட்டியுள்ளனர்.
இதையடுத்து ஷீலா தேவிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை அருண் குமார் கொடுத்துள்ளார். இருந்தபோதும் தொடர்ந்து தனது காதலனிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளார். கடைசியாக 11 ஆயிரம் ரூபாய் அனுப்பிய காதலனுக்கு, ஷீலா தேவி நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், தன்னை காதலிக்கும் பெண், வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக நினைத்து அவரை தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
இதையடுத்து, பீகாரில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள கோண்டாவுக்கு சென்ற அருண் குமார், ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக தனது காதலியை தனியாக அழைத்துள்ளார். அவரும் ரீல்ஸ் மோகத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள கரும்புக் காட்டுக்கு சென்றுள்ளார். அங்கு காத்திருந்த அருண்குமார், தனது காதலியின் கையை கயிறால் கட்டியுள்ளார். அவரும், ஏதோ வித்தியாசமான வீடியோ எடுக்கப் போவதாக நினைத்து போஸ் கொடுத்துள்ளார். அப்போது, திடீரென அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துள்ளார்.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் உயிர் பயத்தில் கத்தி கதறியுள்ளார். ஆனால், ஆள் நடமாட்டம் இல்லாத கரும்புக் காட்டுக்குள் சத்தம் வெளியே கேட்காததால் உதவிக்கு யாரும் வர முடியாமல் போயுள்ளது. திட்டமிட்டு காதலியை தனியாக வரவழைத்த அருண் குமார், அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராமல் அவரின் தலையை துண்டித்து தூக்கி வீசிய இளைஞர், உடலை சிவப்பு துணியை போட்டு மூடிவிட்டு சென்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதேவேளையில், தனது மகள் காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றதாக ஷீலா தேவியின் தந்தை கூறியுள்ளார். அவரின் காதலன் என்று கூறும் இளைஞர் மட்டும் இன்றி, இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே இளம்பெண் கொலை வழக்கில் எலக்ட்ரீசியன் அருண் குமாரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணம் கொடுங்கல் வாங்கல் பிரச்சினை மற்றும் சந்தேகத்தின் பேரில் தான் இளம்பெண்ணை, அவரின் காதலன் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இளம்பெண்ணை ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக அழைத்த காதலன், அவரை கழுத்தறுத்து தலையை துண்டித்து கரும்புக் காட்டில் வீசிய சம்பவம் உத்தர பிரதேசத்தில் பதைபதைக்க வைத்துள்ளது.

