Last Updated:
பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் தேடிய தகவல்களை கேள்வி விளக்கங்களாக (FAQ’s) பார்க்கலாம்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு அஞ்சனாபுராவில் காதலனை உயிரோடு எரித்துக் கொன்ற 27 வயது இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் உயிருக்குப்போராடி எரிந்து கொண்டிருந்த போதே, அதைத் தடுக்க முயலாமல் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த பிரேரணாவின் கொடூர செயல் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது. தற்போது கைதாகியுள்ள பிரேரணாவிடம் இக்கொலை குறித்த மேலதிக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் தேடிய தகவல்களை கேள்வி விளக்கங்களாக பார்க்கலாம்.
இந்தக் கொடூரச் சம்பவம் கடந்த நேற்று காலை 10 மணியளவில் அஞ்சனாபுராவில் உள்ள பிரேரணாவின் வீட்டில் நடந்துள்ளது. வீட்டில் அவரது தாய் மற்றும் சகோதரர் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, தனது காதலன் கிரணை பிரேரணா வரவழைத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த கிரணிடம் சிறிது நேரம் பேசிய பிரேரணா, விளையாட்டாகக் கூறி கிரணின் கண்களைக் கட்டி, அவரது கை மற்றும் கால்களை ஒரு நாற்காலியில் வைத்து இறுக்கமாகக் கட்டியுள்ளார். கிரண் இது குறித்துக் கேட்டபோது, “இது வெளிநாட்டுப் பாணி காதல் புரொப்போசல் (Proposal), அமைதியாக இரு” என்று கூறி அவரை நம்ப வைத்துள்ளார். அந்த நம்பிக்கையில் கிரணும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் கிரண் மீது பெட்ரோலை ஊற்றி பிரேரணா தீ வைத்துள்ளார். கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததால் கிரணால் தப்பிக்க முடியாமல் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். ஒரு தனியார் டெலிகாம் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்துள்ளனர். கிரண் தன்னை உதாசீனப்படுத்துவதாகவும், திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் பிரேரணா ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த ஏமாற்றமே கொலையில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில், தான் கழிவறைக்குச் சென்றிருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்ததாகவும், அப்போது கிரண் தீப்பற்றி எரிந்ததைக் கண்டதாகவும் பிரேரணா நாடகமாடினார். ஆனால், சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது கிரண் கையில் எந்தப் எரிபொருளும் எடுத்து வரவில்லை என்பது உறுதியானது. இதனால் பிரேரணாவின் பொய் அம்பலமானது.
பெட்ரோலை பிரேரணா முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இது திட்டமிட்ட கொலை என்பதை உறுதி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கிரண் தீப்பற்றி எரிந்தபோது, அதைத் தடுக்க முயலாமல் தனது செல்போனில் பிரேரணா முழுமையாகப் வீடியோ பதிவு செய்துள்ளார். இது கொலையின் கொடூரத் தன்மையைக் காட்டுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


