Last Updated:
ஆந்திராவில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி, உடலை சாக்கு மூட்டையில் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களின் பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் ஆண் நண்பருடனான தொடர்புக்கு தடையாக இருந்த கணவனை கொலை செய்துள்ளார் மனைவி. கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களின் பின்னணி என்ன?
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் கைப்பா அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், ஆண் உடல் ஒன்று கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. நந்திவர்க்கம் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, யாரோ ஒரு நபரை கொலை செய்து உடலை கொண்டு வந்து சாக்குப் பையில் சுற்றி, பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் டோன் நகரை சேர்ந்த வில்சன் என்பது தெரியவந்தது. வில்சனின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், அவரை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது வில்சனின் மனைவி மேரி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 11 ஆண்டுகளுக்கு முன்பு வில்சன்-மேரி ஆகியோரின் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்களுக்கு 10 வயதில் மகன், நான்கு வயதில் மகள் ஆகியோர் உள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் வேலை செய்த மேரிக்கு, அங்கு வேலை செய்யும் நந்தியாலாவை சேர்ந்த மது என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அந்த அறிமுகம் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனை அறிந்த வில்சன் தன்னுடைய மனைவியை கண்டித்து இருக்கிறார். இது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மேரி, கணவன் வில்சனை கொலை செய்ய, தனது காதலன் மதுவுடன் சேர்ந்து திட்டம் போட்டு இருக்கிறார். இந்த கொலை திட்டத்தின்படி, மது தன்னுடைய நண்பர்கள் ரபி, அசோக் ஆகியோருடன் திட்டம் போட்டு வில்சனை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்
சம்பவத்தன்று வில்சனை ரபி, அசோக் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்துள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அளவுக்கு அதிகமாக மது குடித்த வில்சன், போதையில் தள்ளாடிய நிலையில், அவரது கழுத்தில் பெல்ட்டை போட்டு இறுக்கிக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் அவரது உடலை ஒரு சாக்குப் பையில் போட்டு மூட்டையாக கட்டி, ஆட்டோ மூலம் கைப்பா பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வில்சனின் உடல் இருந்த மூட்டையைப் போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்து, உடலை எரித்துவிட்டு வில்சன், ரபி, அசோக் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
இந்நிலையில், வில்சனின் மனைவி மேரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவர அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மேரி, வில்சன், ரபி, அசோக் என 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


