2017ஆம் ஆண்டு காட்டு யானைகள் கணக்கெடுப்பில், நாட்டில் சராசரியாக 27,312 யானைகள் கண்டறியப்பட்ட நிலையில், இந்த முறை டிஎன்ஏ அடிப்படையிலான கணக்கெடுப்பில் அவற்றின் எண்ணிக்கை 22,446ஆகக் குறைந்துள்ளது. அகில இந்திய யானைகள் கணக்கெடுப்பு (SAIEE) 2025இன் படி, இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை 18,255 முதல் 26,645 வரை இருக்கும் என்று மதிப்பிடுகிறது. இந்த முறை நாட்டில் சராசரியாக 22,446 யானைகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த யானை கணக்கெடுப்பின் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. 2021இல் தொடங்கப்பட்ட இந்த கணக்கெடுப்பானது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்டது. சிக்கலான மரபணு ஆய்வு மற்றும் டேட்டா வெலிடேஷன் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யானைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க, விஞ்ஞானிகள் அவை நடமாடும் பகுதிகளில் இருந்து 21,056 டன்ங் சாம்பிள்களை சேகரித்து ஆய்வு செய்தனர். யானைகள் நடமாடும் மொத்தம் 6.7 லட்சம் கிலோமீட்டர் காட்டுப் பாதைகளில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.
அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான யானைகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ளன. இந்த பகுதியில் கணக்கெடுப்பின்போது 11,934 யானைகள் கண்டறியப்பட்டன. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பிரம்மபுத்திரா படுகைகளில் 6,599 யானைகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தன. சிவாலிக் மலைகள் மற்றும் கங்கை சமவெளிகளில் 2,062 யானைகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தன. மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் யானைகளின் எண்ணிக்கையும் 1,891ஆகக் குறைந்துள்ளது.
மாநில வாரியாக, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையான 6,013 யானைகள் கர்நாடகாவில் உள்ளன. அதைத் தொடர்ந்து அசாமில் 4,159 யானைகளும், தமிழ்நாட்டில் 3,136 யானைகளும், கேரளாவில் 2,785 யானைகளும், உத்தராகண்டில் 1,792 யானைகளும் உள்ளன. இது தவிர, ஒடிசாவில் 912 யானைகளும், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் மொத்தம் 650க்கும் மேற்பட்ட யானைகளும், மத்தியப் பிரதேசத்தில் 97 யானைகளும், மகாராஷ்டிராவில் 63 யானைகளும் உள்ளன.
இந்த யானைகள் கணக்கெடுப்பானது கிரௌண்ட் சர்வே, செயற்கைக்கோள் அடிப்படையிலான மேப்பிங் மற்றும் மரபணு ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கிய த்ரீ ஃபேஸ் செயல்முறையைப் பயன்படுத்தி உள்ளது. உலகின் யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில் உள்ளன. ஆனால் ஆக்கிரமிப்பு, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் மனித-யானை மோதல் காரணமாக அவற்றின் வாழ்விடங்கள் தொடர்ந்து சுருங்கி வருகின்றன.
October 16, 2025 5:27 PM IST

