காஜாங் | ஏப்ரல் 3, 2026
காஜாங் MRT நிலையத்தில் பெண் ஒருவருக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் கருதப்படும் மர்ம நபர் ஒருவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இது தொடர்பில் ‘த்ரெட்ஸ்’ (Threads) சமூக வலைதளப் பக்கத்தில் சுமார் 23 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்று வைரலானது என்றும், இந்தச் சம்பவம் நேற்று (ஏப்ரல் 2) காலை 9:00 மணியளவில் காஜாங் MRT நிலையத்தின் நுழைவாயில் ‘ஏ’ (Gate A) பகுதியில் நிகழ்ந்துள்ளது என்றும் காஜாங் மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.
அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்த நபர் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார் முதற்கட்ட விசாரணையை முடித்துள்ளனர்.
ஒரு பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுதலுக்காக தண்டனைச் சட்டம் பிரிவு 509 கீழ் இவ்வழக்கு விசாரணை செய்யப்படுகிறது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சந்தேகத்திற்குரிய அந்த நபரை அடையாளம் காணவும், அவரைக் கைது செய்யவும் போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
காஜாங் போலீஸ் தலைமையகம்: 03-89114222
சார்ஜென்ட் நூர் அதிகா அன்வார்: 013-7948922
அல்லது உங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.




