சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் ஒரு காணொளியில் காணப்பட்டபடி, காஜாங்-சிரம்பான் விரைவுச்சாலையின் காஜாங் சுங்கச்சாவடியில் ஒரு காரை உதைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை காவல்துறை கைது செய்தது.
நேற்று மாலை 4 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில் தனது கார் சேதமடைந்ததையடுத்து, 65 வயதான இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, 24 வயதான அந்த சந்தேக நபர் காஜாங்கில் கைது செய்யப்பட்டதாக காஜாங் காவல்துறைத் தலைவர் நஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
இந்த வழக்கு,தண்டனைச் சட்டத்தின் 427-வது பிரிவின் கீழ், சேதப்படுத்துதல் குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
“இந்தச் சம்பவத்திற்கான காரணமும் நோக்கமும் இன்னும் விசாரணையில் உள்ளன,” என நஸ்ரோன் கூறியதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. சாலைப் பயனாளர்கள் பிறர் நலன் கருதி நடந்துகொள்ளவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும், பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுமாறும் அவர் அறிவுறுத்தினார்.




