கோலாலம்பூர்:
சிலாங்கூர் காவல்துறையினர் டிசம்பர் 8 ஆம் தேதி காஜாங்கில் உள்ள மூன்று மாடி அடுக்குமாடி வீட்டில் நடத்திய சோதனையில் RM10.4 மில்லியன் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்ததோடு, மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 40 முதல் 45 வயதுடையவர்கள் என்றும், அதில் இரண்டு மலேசியப் பெண்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு ஆடவர் ஆகியோர் அடங்குவர்.
மேலும் இவர்கள் கடந்த மூன்று மாதங்களாக போதைப்பொருள் சேமிப்பு வசதியாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் வளாகத்தில் பொதி செய்பவர்களாகச் செயல்பட்டதாக நம்பப்படுகிறது.
இது குறித்து மாநில காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார் கூறுகையில், “சுமார் 2 கிலோ எடை கொண்ட சந்தேகத்திற்குரிய கஞ்சா மொட்டுகள் அடங்கிய 1,600 சிகரெட் குச்சிகள், அத்துடன் சுமார் 195.5 லிட்டர் திரவ எக்ஸ்டஸி கொண்டதாக நம்பப்படும் 400 பெட்டிகள் பானங்கள் மற்றும் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று தெரிவித்தார்.
தகவல் மற்றும் உளவுத்துறை அடிப்படையில் சிலாங்கூர் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையும் காஜாங் காவல்துறை தலைமையகமும் இணைந்து இந்தச் சோதனையை நடத்தியதாக அவர் கூறினார்.
“பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து போதைப்பொருட்களும் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டிருந்ததாக நாங்கள் நம்புகிறோம்,” என்று ஷா ஆலாமில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
பறிமுதல் செய்யப்பட்ட பிற போதைப்பொருட்களில் சுமார் 50 கிலோ எடையுள்ள 1,539 பொட்டலங்கள் எக்ஸ்டஸி பொடி, கெட்டமைன் (21.5 கிலோ), எக்ஸ்டஸி மாத்திரைகள் (2.5 கிலோ), மெத்தம்பேட்டமைன் (980 கிராம்), எராமின் 5 மாத்திரைகள் (3.5 கிலோ) மற்றும் யாபா மாத்திரைகள் (587 கிராம்) ஆகியவை அடங்கும்.
கைது செய்யப்பட்ட பெண்களுக்கு தலா RM5,000 கிடைத்ததாகவும், ஆண் சந்தேக நபர் நவம்பர் 25 ஆம் தேதி நாட்டிற்குள் நுழைந்த பிறகு சமீபத்தில் வேலை செய்யத் தொடங்கியதாகவும் நம்பப்படுகிறது. அவரது கடவுச்சீட்டில் சில முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவரது குடிநுழைவு நிலையை காவல்துறை சரிபார்த்து வருகிறது.
மூன்று சந்தேக நபர்களும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான 1952 ஆம் ஆண்டின் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்கு உதவ, நேற்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.




