Last Updated:
டிரம்ப் காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என AI வீடியோ வெளியிட்டது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. 90% கட்டடங்கள் சிதிலமடைந்த காசாவை மீண்டும் கட்டமைக்க 20 ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவை வாங்கியே தீருவேன் என அடம்பிடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
2023- ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி தொடங்கியது இஸ்ரேஸ்- ஹமாஸ் இடையேயான போர். சுமார் 15 மாதகால உக்கிர போருக்கு பிறகு கடந்த மாதம் 19- ஆம் தேதி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட உடன் காசாவை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என அறிவித்தார் டிரம்ப். 90 சதவிகித கட்டடங்கள் சிதிலமடைந்து வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாறிவிட்டது காசா. அப்பகுதியை முழுவதுமாக கட்டமைக்க 20 ஆண்டுகள் ஆகும் எனவும் சுமார் 46 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி, காசாவை தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார் ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேனான அதிபர் டிரம்ப். காசாவை அமெரிக்கா எடுத்துக்கொண்டால் இப்படி தான் இருக்கும் என AI வீடியோவையும் வெளியிட்டுள்ளார். 2025- ஆம் ஆண்டை குறிப்பிட்டு அடுத்தது என்ன என தொடங்குகிறது அந்த வீடியோ
காசாவின் மற்றொரு புறத்தில் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை நினைவுப்படுத்தும் வானளாவிய கட்டடங்கள், பரபரப்பான சந்தைகள், கிளப்புகள், அழகிய கடற்கரை என டிரம்ப் விரும்பும் வாழ்வியலை காட்டுகிறது. பனை மரங்களுக்கு இடையே டிரம்ப்பின் மிகப்பெரிய சிலை, டிரம்ப் முகத்துடனான பொம்மைகள், கிளபில் நடனமாடும் போது பணத்தை வீசி எரியும் மஸ்க் என டிரம்ப்பை சுற்றியே வலம் வருகின்றன காட்சிகள்.
டிரம்ப்பின் நண்பரான எலான் மஸ்க், மிகவும் மகிழ்ச்சியாக தனக்கு பிடித்த உணவை உட்கொள்ளும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. டிரம்ப்பும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் கடற்கரையில் நீச்சல் உடையில் ஓய்வெடுப்பது போன்ற காட்சிகளுடன் வீடியோ முடிவடைகிறது. காசா மக்கள் செல்லெணா துயரத்தை அனுபவித்து வரும் நேரத்தில் டிரம்ப்பின் இந்த வீடியோ கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
February 27, 2025 10:22 AM IST


