ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 55வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இன்று (22.03.2024) சட்டக்கல்லூரி மாணவி ஷமா முயிஸ் (Catholic University of Lyon) கருத்துக்களை முன்வைத்தார். இப்பேரவை எதிர்வரும் ஏப்ரல் 05ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பாலஸ்தீனியர்கள் இடப்பெயர்வு, ஆக்கிரமிப்பு, பாகுபாடு மற்றும் வன்முறைகளை அனுபவித்து வருகின்றனர். இன்று அவர்கள் அடிப்படை தேவைகளை இழந்துள்ளனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டு அடுத்த தலைமுறையினர் அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகளுக்கும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் மீண்டும் மீண்டும் நிகழும் சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளின் முறையான மீறல்களை நாம் இனி புறக்கணிக்க முடியாது.
குண்டுவெடிப்புகள் மற்றும் இராணுவ தாக்குதல்கள் காரணமாக 167 நாட்களுக்குள் 13000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர். 32000 பாலஸ்தீனிய குடிமக்களில் 13000 குழந்தைகள். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு உலக சமூகம் என்ன தகுதி அளிக்கிறது?
உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நெருக்கடிக்கு நாம் கொடுக்கும் பதிலை வைத்து வரலாறு நம்மைத் தீர்மானிக்கும். சர்வதேச சமூகம் அதன் தார்மீக மற்றும் சட்டக் கடமைகளை நிலைநிறுத்த வேண்டும் மற்றும் இந்த பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது உடனடி மற்றும் உறுதியான போர் நிறுத்தத்துடன் தொடங்க வேண்டும். அமைதி என்பது போர் இல்லாதது மட்டுமல்ல. அது நீதியின் இருப்பும் கூட என்று தெரிவித்தார்.
S.D.M. Zahran
UN Correspondent – Geneva Times