Last Updated:
ஹரியானா மாநில காங்கிரஸ் பெண் நிர்வாகி ஹிமானி கொலை வழக்கில், தன் மகள் கொலைக்கு பணம் தான் காரணமா? காவல்துறை முக்கிய காரணத்தை எங்களுக்கு சொல்ல வேண்டும் என அவரது தாய் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெண் காங்கிரஸ் நிர்வாகி ஹிமானி நர்வால் (22) மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட அவரது உடல், சூட்கேஸில் அடைக்கப்பட்டு, பேருந்து நிலையத்தின் அருகே வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் ஹரியானா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஹரியானா மாநிலத்தின் 7 நகராட்சிகளுக்கான மேயர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற அன்று, காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்டு, பேருந்து நிலையம் அருகே அது கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
22 வயதான ஹிமானி நர்வால், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையில் பங்கேற்று அவருடன் நடைப்பயணம் மேற்கொண்டவர். மேலும், அம்மாநில காங்கிரஸில் அதிகம் கவனிக்கப்பட்டுவந்தவர். இவர் மர்மமான முறையில் அதுவும், உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அன்று கொல்லப்பட்டிருந்தது அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும், இவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையும் படியுங்கள் : மத்திய இணை அமைச்சரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மகாராஷ்டிரா காவல்துறை
காவல்துறையின் விசாரணையில், ஹிமானியுடன் பழகி வந்த ஆண் நண்பரான சச்சின் என்பவர் போலீசில் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹிமானியும், சச்சினும் சில காலமாக நெருங்கி பழகி வந்ததாகவும், ஹிமானி தன்னை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும், தொடர்ந்து பணம் கேட்டு சித்ரவதை செய்ததால் விரக்தியடைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி உறவினர் வீட்டில் தனியாக தங்கி இருந்த ஹிமானியை சச்சின் சந்தித்துள்ளார். அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்தவர், சார்ஜ் வயரால் கழுத்தை இறுக்கி ஹிமானியை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை பெரிய நீல நிற சூட்கேஸில் போட்டு பைபாஸ் ஓரம் வீசி விட்டு தப்பி சென்றார்.
இக்கொடூர சம்பவம் தொடர்பாக, சச்சினை கைது செய்த ஹரியானா போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கலில் ஆண் நண்பரால் ஹிமானி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஹிமானியின் தாய் சவிதா, “என் மகளுக்கு யாருடனும் நெருங்கிய பழக்கம் இல்லை. என் மகள் ஏன் கொல்லப்பட்டாள் என எனக்கு தெரிய வேண்டும். இந்தக் கொலைக்கு பணம் காரணமாக இருக்க முடியாது. ஒருவேளை தற்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரே கொன்றிருந்தால், பிறகு எப்படி அந்த நபர் என் மகளின் நண்பராக இருந்திருக்க முடியும். இந்த கொலைக்கான முக்கிய காரணத்தை எங்களுக்கு சொல்ல வேண்டும். காவல்துறையின் நடவடிக்கை எனக்கு திருப்தியாக இல்லை. குற்றவாளிக்கு மரண தண்டனை தர வேண்டும். குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை என்றால் நான் தற்கொலை செய்துகொள்வேன். அதற்கு ஹரியானா அரசும், நிர்வாகமும் தான் பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
March 03, 2025 7:33 PM IST
காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை; கொலைக்கு பணம் தான் காரணமா? சந்தேகம் எழுப்பும் ஹிமானி நர்வால் தாய்


