Last Updated:
25 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த அம்பர்நாத் நகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் உடன் பாஜக கூட்டணி அமைத்து அம்பர்நாத் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கும், பாஜகவிற்கும் இடையே உரசல் எழுந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் பாஜகவும், ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் நேருக்கு நேர் மோதின.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் மக்களவை தொகுதிக்குட்பட்ட அம்பர்நாத் நகராட்சிக்கான தேர்தல் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது.இந்த நகராட்சியில் சிவசேனாவிற்கும், பாஜகவிற்கும் இடையே உடன்பாடு எட்டாத நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே களம் கண்டன.
மொத்தமுள்ள 60 இடங்களில் நகராட்சித் தலைவர் பதவியை பெற 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், சிவசேனா 27 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 14, காங்கிரஸ் 12, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும், சுயேட்டைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
சிவசேனா தரப்பில் மனிஷா வாலேகரும், பாஜக தரப்பில் தேஜஸ்ரீ கரஞ்சுலேயும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் பாஜக வேட்பாளர் தேஜஸ்ரீ கரஞ்சுலே நகராட்சி தலைவராகியுள்ளார். இதன்மூலம் 25 ஆண்டுகளாக சிவசேனாவின் கோட்டையாக இருந்த அம்பர்நாத் நகராட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது.


