குடியரசு தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது; “நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்குமான வளர்ச்சியை இந்த அரசாங்கம் கொடுத்திருக்கிறது. அதை குடியரசுத் தலைவர் சரியாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இந்தியாவின் வளர்ச்சியில் இந்திய இளைஞர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியம். உலக நாடுகளை ஒப்பிடும் பொழுது, இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.
அறிவியல் துறை, விளையாட்டு துறை என அத்தனை துறைகளிலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறி வருகிறது.
ஒப்பந்தங்களின் தாய் என்று வர்ணிக்கப்படக்கூடிய ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை சமீபத்தில் நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.
இந்த அரசு மீது எதிர்க்கட்சிகள் நிறைய குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதில் சொல்கிறேன். விக்சித் பாரத் பயணத்தில், கடந்த ஆண்டுகள் நாட்டின் விரைவான வளர்ச்சிக்குரிய ஆண்டுகளாக இருந்துள்ளன.
இது வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் மாற்றங்கள் ஏற்பட்ட ஒரு காலகட்டமாக இருந்துள்ளது. நாடு சரியான திசையில் அதிவேகமாக முன்னேறிச் செல்கிறது.
குஜராத்தில் நடந்த வைப்ரண்ட் இந்தியா நிகழ்ச்சியில் வளர்ந்த நாடான ஜப்பான் கூட இந்தியாவின் செயல்பாடுகளை புகழ்ந்தது. ஜப்பான் தான் அந்த நிகழ்ச்சியின் இந்தியாவின் கூட்டாளியாக இருந்தது.
அறிவியல் துறை, விளையாட்டு துறை என அத்தனை துறைகளிலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறி வருகிறது. ஆனால் இதே ஜப்பானை தான் நான் குஜராத் முதல்வராக இருந்தபோது போட்டியாக நினைத்தேன்.
இன்று, உலகின் முக்கியப் பொருளாதார நாடுகளில், இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று வருகிறது. விரைவான வளர்ச்சியும் குறைந்த பணவீக்கமும் ஒருங்கே அமைந்திருக்கும் இந்த அரிய நிலை, நமது பொருளாதாரத்தின் வலிமைக்கும் மீள்தன்மைக்கும் ஒரு சான்றாகும்.
நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, இந்தியா ‘பலவீனமான ஐந்து’ பொருளாதார நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்டது. சுதந்திரம் பெற்ற நேரத்தில், நாம் உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இருந்தோம். இருப்பினும், இடைப்பட்ட ஆண்டுகளில் ஏற்பட்ட தவறான நிர்வாகத்தின் காரணமாக, நமது தரம் 11-வது இடத்திற்குச் சரிந்தது.
இப்போது, நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டே வர்த்தக ஒப்பந்தங்களில் புரட்சி செய்து வருகிறோம்.
நாங்கள் செய்த ஒப்பந்தத்தை போல யாராவது செய்துள்ளார்களா? நாம் செய்துள்ள ஒப்பந்தத்தால் உலக சந்தைகள் இந்தியாவிற்காக திறந்து உள்ளது.
நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் நாடாளுமன்றத்தில் இவ்வளவு மோசமாக எதிர்க்கட்சிகள் நடந்து கொள்கின்றனர். வளர்ச்சி குறித்து தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் இன்றைய தினம் அவர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.
நாம் போட்ட ஒப்பந்தத்தை பற்றி பேசுகிறார்கள். இவர்கள் போட்ட போபார்ஸ் ஒப்பந்தம் குறித்து பேசுவோமா? எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு மிகவும் புத்திசாலித்தனமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறோம்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வங்கிகள் கடனில் மூழ்கி இருந்ததுதான் வங்கி துறையில் அவர்கள் செய்த சீர்திருத்தம். ஒட்டுமொத்த வங்கித் துறையும், பொது துறைகளையும் சீரழித்து வைத்திருந்தது காங்கிரஸ் அரசாங்கம். அதை நாங்கள் வந்து தான் சரி செய்து இருக்கிறோம்.
காங்கிரஸ் காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வங்கி கடன்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது ஏழைகள் வங்கி கடன்களை பெற்று வருகிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாராக்கடனில் சிக்கி இருந்த வங்கிகளை மீட்டெடுத்து வாராக்கடன்களின் விகிதத்தை ஒரு சதவீதமாக குறைத்து இருக்கிறோம். இந்தியாவிலேயே பொருட்கள் தயாரிக்கப்படுவது என்பது ஒரு காலத்தில் கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது Make in India என்பதை நனவாக்கி இருக்கிறோம்.
இந்திய விவசாயிகளை கைவிட்ட கட்சி தான் காங்கிரஸ். பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் இந்திய விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் இந்தியாவின் சிறு விவசாயிகள் பெரும் பலனை அடைந்து வருகிறார்கள்.
காங்கிரஸ் ஆண்ட காலத்து பிரதமர்களை விட நான் மிக வேகமாக செயல்படுகிறேன். எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ, HAL ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடுமையாக தடுமாறி வந்தன. ஆனால் தற்போது இந்த மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் லாபகரமாக செயல்படுகிறது.
ஜவர்லால் நேரு கொண்டு வந்த திட்ட கமிஷனை இந்திரா காந்தியே விமர்சித்திருக்கிறார். நான் குஜராத் முதல்வராக இருந்த காலகட்டத்தில் வளர்ச்சிக்காகவும் வளர்ச்சி திட்டங்களுக்காகவும் காங்கிரஸ் அரசிடம் கெஞ்சி கெஞ்சி நடக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்பாக காங்கிரஸ் செய்த அனைத்து தவறுகளையும் சரி செய்து கொண்டிருக்கின்றோம்” இவ்வாறு அவர் பேசினார்.

