மேலும் இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே ராதாகிருஷ்ணன், ‘இந்தியாவுடைய வெளியுறவுக் கொள்கையில் கருத்தியல்ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லை. ‘SAGAR’ என நம்முடைய அண்டை நாடுகள் எல்லாவற்றையும் அரவணைத்து போகக் கூடிய ஒரு கொள்கை இருக்கிறது. ‘Look East’ என ஒரு கொள்கை இருக்கிறது.
அதாவது, கிழக்கில் இருக்கக்கூடிய ஆசிய நாடுகளை நாம் அணுகலாம். அவர்கள் நம்மை அரவணைத்துக் கொள்வார்கள் என்கிற கொள்கை இது. இப்படி கருத்தியல்ரீதியாக இந்தியாவின் கொள்கைகள் வலுவாகத்தான் இருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் நிலைமை வேறாக இருக்கிறது. நாங்கள் உனக்கு இதை செய்தோம். அதற்காக நீங்கள் எங்களுக்கு இதைச் செய்யுங்கள் என்பதாகத்தான் இந்தியா அண்டை நாடுகளை அணுகுகிறது.

மேலும், கார்ப்பரேட்களுக்காக குறிப்பாக அதானிக்காக செயல்படக்கூடிய அரசாக இந்த அரசு இருக்கிறது. இதுதான் பிரச்சனை. இஸ்லாமிய நாடுகளுக்கு இஸ்ரேலோடு இணக்கமாக இல்லையென்றாலும் அவர்களோடு சண்டையும் கிடையாது. ஆனால், இந்தியா இஸ்ரேலோடு அதிக இணைக்கம் காட்டியது. இதை அரபு நாடுகள் அவ்வளவாக ரசிக்கவில்லை. துருக்கி, மலேசியா, மாலத்தீவு போன்ற நாடுகள் உச்சக்கட்ட இஸ்ரேல் எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள்.
அவர்களும் இந்தியாவுக்கு எதிரான மனநிலையை பரப்புவார்கள். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை அதிகாரியாக இருந்த போது மிகச்சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது ரொம்பவே அக்ரஸிவ்வாக சில கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
எதற்கெடுத்தாலும் நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்கள் மேற்கத்திய நாடுகள் சொல்வதை கேட்கமாட்டோம் என வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கிறார். இந்தியா இதையெல்லாம் முன்பும் செய்துகொண்டுதான் இருந்தது. முன்பு ராஜதந்திரரீதியில் சமயோஜிதமாக செய்ததை இப்போது அப்படியே வெளியில் வெளிப்படையாக பேசுகிறார். இதனால்தான் பல நாடுகளுக்கும் இந்தியாவுடன் முரண் ஏற்படுகிறது.

