Last Updated:
நான் மட்டுமல்ல, அனைத்து வீரர்களும் அணியின் நலனுக்காக என்ன தேவையோ அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
ஆஸ்திரேலிய தொடரில் சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடாதது குறித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதன்முறையாக பதில் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நவம்பரில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது இந்திய அணி.
இதில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். அந்த நேரத்தில் ரோஹித் சர்மாவுக்கும், பயிற்சியாளர் கவுதம் காம்பீருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கிற்கு ரோஹித் சர்மா அளித்துள்ள பேட்டியில் கிரிக்கெட் குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் ரோஹித் சர்மா கூறியதாவது-
ஆஸ்திரேலிய தொடரில் கடைசி மேட்ச்சாக சிட்னி டெஸ்ட் போட்டி நடந்தது. உண்மையை சொல்ல வேண்டும்மென்றால், என்னால் அந்த தொடரில் பந்துகளை சரியாக அடிக்க முடியவில்லை. அதனால் நான் சிட்னி டெஸ்டில் விளையாட விரும்பவில்லை.
அணியில் மற்ற திறமையான வீரர்கள் இருந்தனர். நான் சுப்மன் கில் விளையாட வேண்டும் என்று விரும்பினேன். தொடக்கத்தில், எனது பேட்டிங் பர்ஃபார்மென்ஸ் விரைவில் சரியாகி விடும் என்று நினைத்தேன். போதிய ஃபார்மில் இல்லாததால் நான் பயிற்சியாளரிடம் பேசினேன். அணியின் நலன் கருதி வாக்குவாதம் அப்போது நடந்தது. அதன் அடிப்படையில் நான் விளையாடவில்லை.
அனைத்து முடிவுகளும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்று கூறி விட முடியாது. நான் மட்டுமல்ல, அனைத்து வீரர்களும் அணியின் நலனுக்காக என்ன தேவையோ அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னுடைய தனிப்பட்ட ரன்கள் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு குழு விளையாட்டை விளையாடுகிறீர்கள் என்று தெரிவித்தார்.
April 17, 2025 8:54 AM IST
‘கவுதம் காம்பீருடன் வாக்குவாதம் நடந்தது’ – சிட்னி டெஸ்டிலிருந்து விலகியது குறித்து முதன்முறையாக ரோஹித் சர்மா பதில்


