டென்னிஸ் ஜாம்பவானான ரஃபேல் நடால் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். களிமண் கள நாயகனாக ஜொலித்த ரஃபேல் நடால் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டென்னிஸ் உலகில் போர்க்குணம் கொண்ட வீரராக கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நடால். 1986-ஆம் ஆண்டு பிறந்த நடால், டென்னிஸின் உச்சமான கிராண்ட்ஸ்லாம் தொடரில் முதல் முறையாக 2003-ஆம் ஆண்டு, தனது 17 வயதில் விளையாடத் தொடங்கினார். அடுத்தடுத்து அபார வெற்றிகளை குவித்த நடால், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் மட்டும் 14 பட்டங்களை வென்று, தன்னை களிமண் தரையின் நாயகனாக நிலைநிறுத்தினார். மொத்தம் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ள நடால், அதிக பட்டங்களை வென்றவர்கள் வரிசையில் 2-ஆவது இடம் பிடித்துள்ளார்.
டென்னிஸ் உலகில் எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரரான நடாலுக்கு, தொடக்கத்தில் இருந்தே தடைக் கற்களாக இருந்தது அவரது காயங்கள். உடலில் இவருக்கு காயம் ஏற்படாத இடங்களே குறைவு என்ற வகையில், முழங்கை, கால், கால் மூட்டு, தொடை, இடுப்பு என அவ்வப்போது ஏதேனும் ஒரு காயத்தில் சிக்கும் நடால், பல நேரங்களில் அதில் இருந்து மீண்டு வந்தும் சாதித்துள்ளார்.
காயம் காரணமாக கடந்த ஆண்டு 3 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் விளையாடாத நடால், இந்த ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் களமிறங்கவில்லை. மேலும், களிமண் தரையில் கோலோச்சிய நடால், கடந்த மே மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில், முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தார். அதன் பின்னர், நடந்த விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபனிலும் காயம் காரணமாக நடால் களமிறங்கவில்லை.
இந்நிலையில், தன்னுடைய 21 ஆண்டு கால டென்னிஸ் அத்தியாயத்தை முடித்துக் கொள்வதாக நடால் அறிவித்துள்ளார். தன்னால் இனியும் விளையாட முடியாது என ஓய்வு அறிவிப்பு வீடியோவில் உருக்கமாக நடால் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் மிகச் சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரஃபேல் நடால், தனது அத்தியாயத்தை வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருடன் முடித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். டென்னிஸ் விளையாட்டில் அழியாத முத்திரை பதித்த ரஃபேல் நடால் ஓய்வு பெற இருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
