Last Updated:
நாக்பூர் பிராச்சி கொலை வழக்கில், திருமண மறுப்புக்கு ஆத்திரப்பட்ட சேகர் தோரெ மாணவியை கொலை செய்து, தற்கொலை நாடகம் ஆடியதாக போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிராவில் கல்லூரி மாணவி மரண வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது பக்கத்து வீட்டு இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 23 வயதான மாணவி பிராச்சி. கல்லூரி மாணவியான இவர் படித்துக் கொண்டே, பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பாக பயிற்சி பெற்று வந்துள்ளார். புதன்கிழமை அன்று இவரின் பெற்றோர் மற்றும் சகோதரர் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் பெற்றோர் வீடு திரும்பிய போது, அங்கு கண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயுள்ளனர். தங்களின் ஆசை மகள், தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் உடைந்து போயுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையில் மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டதும், அதனால் உயிர் பிரிந்ததும் தெரியவந்துள்ளது. உடனே, சந்தேகத்தின் பேரில் மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது.
38 வயதான சேகர் தோரெ மாணவியின் பக்கத்து வீட்டில் நீண்ட நாட்களாக வசித்து வந்துள்ளார். இவர், மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னை திருமணம் செய்யக் கூறி சேகர் தோரே அழுத்தம் கொடுத்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில், வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே நுழைந்துள்ளார். அப்போது, அவர் அத்துமீற முயன்றதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் மாணவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளைஞர், அவரின் தலையை சுவற்றில் பலமுறை அடித்து தாக்கியுள்ளார்.
கொடூர தாக்குதலில் உயிரிழந்ததை உறுதி செய்த இளைஞர், மாணவியை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகம் ஆடியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கெண்டதாக இளைஞர் நாடகம் ஆடிய சம்பவம் நாக்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி மரண வழக்கில் திடீர் திருப்பம்.. இளைஞர் சொன்ன பகீர் வாக்குமூலம்.. விசாரணையில் பகீர் தகவல்கள்!


