பாறுக் ஷிஹான்
அம்பாறை, கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ‘அக்ரம் பார்ம் ஹவுஸ்’ முன்பாக உள்ள லங்கா சதோச நிறுவனத்தின் களஞ்சியசாலை
மற்றும் அதனை அண்டியுள்ள வீடொன்றின் பிரதான வாயில், சுற்றுமதில்கள்
என்பவற்றை இன்று (25) அதிகாலை இரண்டு காட்டு யானைகள் உடைத்துச்
சேதப்படுத்தியுள்ளன.
இன்று அதிகாலை வேளையில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த இரண்டு காட்டு
யானைகளும், சதோச களஞ்சியசாலையின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியதுடன்,
அருகிலிருந்த வீடொன்றின் பிரதான நுழைவாயில் மற்றும் சுவர்களையும் கடுமையாகச்
சேதப்படுத்தியுள்ளன.
இதனால் அப்பகுதியில் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு யானைகளை விரட்ட
முயற்சித்துள்ளனர்.
மக்களின் கோரிக்கை
அதைத் தொடர்ந்து, அந்த இரு யானைகளும் அப்பகுதியிலுள்ள
குளத்துப் பகுதியை நோக்கி வீதியைக் கடந்து வெளியேறிச் சென்றுள்ளன.

அண்மைக்காலமாக கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளின்
ஊடுருவல் அதிகரித்து வருவதனால், பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதுடன்,
அசம்பாவிதங்கள் தொடர்வதைத் தடுக்க
வனவிலங்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்
கோரிக்கை விடுக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

