கர்நாடகாவில் 15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. காயமடைந்த அந்த குழந்தையின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மல்லிகார்ஜுன் பலதண்டி நேற்று மண்டியாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மண்டியா அருகேயுள்ள நாகமங்களாவில் மஞ்சுநாத் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அவரது பண்ணையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் 15 வயது சிறுவன் எடுத்து விளையாடியதாக தெரிகிறது. அப்போது தவறுதலாக சுட்டதில் 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது.
அந்த குழந்தையின் 29 வயது தாயாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் மண்டியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நாகமங்களா போலீஸார் 15 வயது சிறுவன் மீதும், துப்பாக்கியின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த குழந்தை மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் குழந்தை ஆகும். துப்பாக்கியால் சுட்ட 15 வயது சிறுவனும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.