கர்நாடகாவில் உள்ள கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோயிலில் தமிழக முதல்வர் விஜய் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார். அம்மனுக்கு 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகே அமைந்துள்ள கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின் மூலவரான ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகிறார். தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், வி.என். ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் இந்த கோயிலுக்கு சென்று, சிறப்பு வழிபாடு மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல நடிகர் ரஜினிகாந்த், இசை ஞானி இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்களும் இந்த கோயிலுக்கு அடிக்கடி சென்றுள்ளனர். கடந்த ஆண்டு இளையராஜா மூகாம்பிகை கோயிலுக்கு ரூ. 4.5 கோடி மதிப்பில் வைர கிரீடம், நெக்லஸ், தங்க வாள், வெள்ளி கிரீடம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக வழங்கினார்.
இந்நிலையில், டில்லிக்கு சென்றிருந்த தமிழக முதல்வர் விஜய் நேற்று காலை 12.30 மணிக்கு அங்கிருந்து விமானம் மூலம் கர்நாடகாவில் உள்ள மங்களூருக்கு சென்றார். கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதரும், உடுப்பி மாவட்ட அரசு அதிகாரிகளும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மங்களூரில் இருந்து சுமார் 140 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு காரில் சென்றார். வழிநெடுக ஆங்காங்கே விஜய்க்கு தமிழ், கன்னட ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாலை 3.30 மணி அளவில் கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் கோயிலுக்குள் நுழைந்த விஜய்யை கோயில் நிர்வாகிகள் வரவேற்று, சால்வை அணிவித்தனர். கோயிலின் தலைமை அர்ச்சகர் ராமச்சந்திர அடிகா, முதல்வர் விஜய்க்காக 20 நிமிடங்கள் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் கொடி மரம், நந்தி உள்ளிட்டவற்றை விஜய் தரிசனம் செய்தார். கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு நேர்த்தி கடனாக 1.6 கிலோ எடை கொண்ட வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார். கொட்டும் மழையிலும் கோயிலில் காத்திருந்த ரசிகர்களை நோக்கி விஜய் உற்சாகமாக கையசைத்தார். கோயிலுக்குள் இருந்து வெளியே வீதிக்கு செல்லும் வரை அவரே காரை ஓட்டி சென்றார். (a)


