கரூரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும், பாஜக வழக்கறிஞரும் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது, கூட்ட நெரிசல் வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத விஜயை, சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து இருப்பதாக தவெக தரப்பு சுட்டிக்காட்டியது. கரூரில் உயிரிழப்பு நடந்தவுடன் காவல்துறை தான் விஜயை அங்கிருந்து செல்லுமாறு கூறியதாகவும், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக நிர்வாகிகள் சிலரை காவல்துறை அனுமதிக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.
மேலும், உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பதிலாக, உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் தவெக தரப்பு வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது எப்படி என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போது மற்ற மனுக்களில் உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? என்று நீதிபதிகள் வினவினர். ஒரே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பு, வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டது.
இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, உயர் நீதிமன்றம் திறமையான அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்திருப்பதால், சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறினார். தொடர்ந்து பிற மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ரவுடிகள் கூட்டத்தில் நுழைந்ததாலும், காவல்துறை தடியடி நடத்தியதாலும்தான் இந்த விபத்து ஏற்பட்டது என வாதிட்டனர்.
இரவில் உடற்கூராய்வு செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கேள்வி எழுப்பினர். இதற்கு சிறப்பு அனுமதியுடன் உடற்கூராய்வை இரவில் நடத்தலாம் என்றும், அதில் எந்த தவறும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வாதிட்ட தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன், அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை தொடர்ச்சியாக தெரிவிப்பவர்கள், என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்றார்.
நண்பகல் 12 மணிக்கு வரவேண்டிய விஜய், இரவு 7 மணிக்கு தாமதாக வந்ததாகவும் வில்சன் சுட்டிக்காட்டினார். காலை முதலே அங்கு கூடியிருந்த மக்கள் தண்ணீர் மற்றும் உணவின்றி சோர்வடைந்து மயக்க நிலையை அடைந்ததாகவும், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டபோது அவர்கள் முண்டியடித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கூட்டத்தில் ரவுடிகளோ, ஆளும் கட்சியின்ரோ புகுந்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனவும் வாதிட்டார். தொடர்ந்து, வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி வழங்கியிருந்தனர். இந்நிலையில்,கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக யார் விசாரிப்பது என்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர்.
October 13, 2025 7:50 AM IST
கரூர் துயரம்: சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிப்பதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

