கரூர்: கரூர் மாவட்டம் ஜவஹர் பஜாரில் தரைக்கடை போட்டியிருந்த வியாபாரிகள் 30 பேரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்களை விடுவித்த போலீஸார், திருவள்ளுவர் மைதானத்தில் கடை போட்டுக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு கரூர் மாநகராட்சி கூட்டத்தில் ஜவஹர் பஜார் தவிர பிற இடங்களில் தரைக்கடைகள் அமைத்து கொள்ள அனுமதி வழங்கி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து காவல் துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஜவஹர் பஜார் தவிர பிற இடங்களில் தரைக்கடைகள் அமைத்துக் கொள்ளமாறு அறிவுறுத்தப்பட்டு பதாகை வைக்கப்பட்டிருந்தது.
கரூர் நகர பகுதியில் பசுபதீஸ்வரர் கோயில் மடவளாக தெரு உள்ளிட்ட இடங்களில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடந்த சில நாட்களாக தரைக்கடை அமைத்துள்ளனர். இந்நிலையில் இன்று (அக்.19ம் தேதி) ஜவஹர் பஜாரில் வியாபாரிகள் தரைக்கடைகள் போட்டுள்ளனர். இதையடுத்து கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீஸார் கடைகளை அகற்றக்கோரியதை அடுத்து வியாபாரிகள் போலீஸார் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட பெண் வியாபாரிகள் உள்ளிட்ட 30 பேரை கரூர் நகர போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த சாலையோர தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளரும், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான தண்டபாணி இன்ஸ்பெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீஸார் அழைத்து செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருவள்ளுவர் மைதானத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை அகற்றி ஜவஹர் பஜாரில் கடை போட்டவர்களை அங்கு கடை வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் திருவள்ளுவர் மைதானத்தில் கடை அமைக்க அனுமதித்ததை அடுத்து அங்கு வியாபாரிகள் கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டனர்.