Last Updated:
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக தலைவர் விஜய் ஆஜரானார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. முதல் கட்டமாக கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள் தவெக நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தவெக முக்கிய நிர்வாகிகள் என். ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் காவல் உயரதிகாரிகள் உள்ளிட்டோரை டெல்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அடுத்த கட்டமாக தவெக தலைவர் விஜய் கடந்த 12ஆம் தேதி டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடர விரும்பிய நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக மற்றொரு நாளில் ஆஜராக விரும்புவதாக விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அதை ஏற்றுக் கொண்டு திங்கட்கிழமை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் தரப்பில் சம்மன் தரப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதன்படி இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜராக நேற்று மாலை தனது சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து கார் மூலம் தவெக தலைவர் விஜய் விமான நிலையத்திற்கு சென்றார்.
தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய் அங்குள்ள நட்சத்திர விடுதியில் இரவு தங்கினார். இந்நிலையில் காலை 10.30 மணிக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 2வது நாளாக தவெக தலைவர் விஜய் ஆஜரானார்.
Jan 19, 2026 10:44 AM IST


