புவி வெப்பமயமாதலின் காரணமாக, மின்சார நுகர்வு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், ஏர் கண்டிஷனர் மின்சாரம் இல்லாமல் இயங்குமா என்ற கேள்வி, தற்போது விஞ்ஞானிகள் மத்தியில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஃபிரிட்ஜ் மற்றும் ஏசிகள் திறமையாக இயங்கினாலும், அவை பொதுவாக அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தரவு மையங்களுக்கும் தற்போது அதிகளவு மின்சாரம் தேவைப்படுகிறது. எதிர்காலத்தில் இந்தத் தேவை மேலும் அதிகரித்தால், வீட்டு உபயோகம், தொழிற்சாலைகள் மற்றும் பிற துறைகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தின் மீதான அழுத்தம் இன்னும் அதிகமாகும் வாய்ப்புள்ளது. அதனால் தான், உலகளவில் சூரிய, காற்று, நீர், அணு மற்றும் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியை விரிவுபடுத்துவதோடு, மின்சார நுகர்வைக் குறைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் மீதும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

