
Last Updated:
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த ஒரு தம்பதியினர், கரக்பூர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்றை தத்தெடுத்து உள்ளனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த ஒரு தம்பதியினர், கரக்பூர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்றை தத்தெடுத்து உள்ளனர். நியூ ஜெர்சி தம்பதி தத்தெடுத்துள்ள அந்த குழந்தைக்கு தற்போது நான்கு வயது ஆகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கரக்பூர் ரயில் நிலையத்தில் 6 மாதக் குழந்தையாக இருந்த போது கைவிடப்பட்ட சிறப்பு கவனிப்பு தேவை கொண்ட இந்த குழந்தையை, அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த தம்பதியினர் சமீபத்தில் முறையாக தத்தெடுத்தனர். இந்த தம்பதியனரின் பெயர் ஜோஸ்வா (Joshua) மற்றும் ரேவன் லியூரன்ஸ் ஆகும். இவர்கள் தற்போது நான்கு வயதுடைய சங்கீத் (Sangeet) என்ற மாற்றுத்திறனாளி குழந்தையை தான் தத்தெடுத்து உள்ளனர். ஏற்கனவே இரண்டு மகள்களின் பெற்றோரான இந்த தம்பதியினர், இந்த குழந்தையை தங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறினர்.
முன்னதாக கரக்பூர் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த குழந்தையை கண்ட உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து அந்த குழந்தை மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டது. மெதினிபூரில் உள்ள வித்யாசாகர் பாலிகா பவனில் அந்த குழந்தை தங்க வைக்கப்பட்டது. கொல்கத்தா மற்றும் மெதினிபூரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்புத் துறையால் உடல் மற்றும் மனநல சிகிச்சை அந்த குழந்தைக்கு அளிக்கப்பட்டது. குழந்தைக்கு நடப்பதில் சிக்கல் இருந்தது. அவரால் பேசக்கூட முடியவில்லை. மெதுவாக, குழந்தை அந்த பிரச்சினையைச் சமாளித்து பேச கற்று கொண்டது. தற்போது இந்த குழந்தையால் நடக்க முடியும் என்றாலும் அதன் நடை இன்னும் இயல்பாகவில்லை.
இதனிடையே இந்த குழந்தையை தத்தெடுத்துள்ள தம்பதியரில், அந்த ஆண் மார்பிள் டிசைனராகவும், அந்த பெண் இல்லத்தரசியாகவும் உள்ளனர். கடந்த 1 வருடத்திற்கு முன்பு, இவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுக்க விண்ணப்பித்தனர். இவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம் அமெரிக்க தம்பதியினரைத் தொடர்பு கொண்டது. விதிகளின்படி, 2 குழந்தைகள் பெற்ற பிறகும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினால், அவர்கள் ஒரு சிறப்புத் திறன் கொண்ட குழந்தையை தங்கள் பொறுப்பில் ஏற்கலாம். இந்த விதியைப் பின்பற்றி, பஸ்சிம் மெதினிபூர் மாவட்ட நிர்வாகம் கரக்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தையை அமெரிக்க தம்பதியினரிடம் ஒப்படைத்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் வைத்து கூடுதல் மாவட்ட நீதிபதி கெம்பா ஹன்னையா மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி (பஞ்சாயத்து) மௌமிதா சஹா ஆகியோர் குறிப்பிட்ட அந்த குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை அமெரிக்க தம்பதியினரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை தத்தெடுத்த பிறகு பேசிய அமெரிக்க தம்பதியினர், “எங்களுக்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகனை தத்தெடுக்க விண்ணப்பித்தோம். தற்போது எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினர் இணைந்துள்ளார். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கு அமெரிக்காவில் உடல் பரிசோதனை செய்யப்படும் என்றனர். குழந்தைக்கு உரிய பாஸ்போர்ட்டை மாவட்ட நிர்வாகம் தயார் செய்துள்ளது. இந்த குழந்தைக்கு தங்களின் விருப்பப்படி பெயர் வைப்பது குறித்தும் தம்பதியினர் சிந்தித்து வருவதாக குறிப்பிட்டனர்.
தனது புதிய பெற்றோரை சந்தித்த பிறகு, குழந்தை அரை மனதுடன், “நான் அமெரிக்காவிற்கு காரில் சென்று பின்னர் விமானத்தில் செல்வேன்” என்று கூறியது. பாஸ்சிம் மெதினிபூரின் கூடுதல் மாவட்ட நீதிபதி பேசுகையில் ஒரு மாதத்திற்கு முன்பு, இத்தாலியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் இங்கே ஒரு குழந்தையைத் தத்தெடுத்தனர். தற்போது அமெரிக்க தம்பதியினர் தத்தெடுத்துள்ளனர். மொத்தம், இதுவரை மாவட்டத்தில் 57 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். அரசு இல்லத்தில் இன்னும் மூன்று குழந்தைகள் உள்ளனர் என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
January 17, 2025 6:04 PM IST
கரக்பூர் ரயில்வே பிளாட்ஃபார்ம் முதல் நியூஜெர்சி வரை…. 4 வயதுடைய மாற்றுத்திறனாளி குழந்தையின் பயணம்.!!

