Cricket
oi-Yogeshwaran Moorthi
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் புதிய வரலாறு படைத்துள்ளது. கடந்த 31 ஆண்டுகளில் பாகிஸ்தான், இலங்கை அணிகளால் கூட செய்ய முடியாத சாதனையை வங்கதேசம் செய்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளாது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 426 ரன்களை குவித்தது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 284 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இதையடுத்து 57 ரன்கள் எடுத்து வங்கதேசம் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் வங்கதேசம் அணி வெல்லும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த வெற்றிக்கு பின் வங்கதேச அணி வீரர்கள் யாரும் பெரிதாக கொண்டாடவில்லை. அந்த சம்பவமே ஆஸ்திரேலியா அணி வீரர்களின் முகத்தை கரியை பூசியது போல் அமைந்தது.
ஏனென்றால் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை வெறும் 54 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி சுருட்டி இருந்தது. இதனால் வங்கதேச அணியை ஒரு அணியாகவே ஆஸ்திரேலியா அணி மதிக்கவில்லை. ஆனால் அந்த தோல்வியும், ஆஸ்திரேலியா வீரர்களின் உடல்மொழியும் வங்கதேச அணி வீரர்களை உசுப்பிவிட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
கடந்த 31 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவை தவிர்த்து வேறு எந்த அணியிடமும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் தோல்வியடைந்ததே இல்லை. இலங்கை, பாகிஸ்தான் அணிகளால் கூட செய்ய முடியாத சாதனையை வங்கதேச அணி செய்து அசத்தியுள்ளது. இது ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவே அமைந்துள்ளது.
ஏனென்றால் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், லயன், டிராவிஸ் ஹெட் என்று அத்தனை முக்கிய வீரர்களும் இருந்தே இந்த தோல்வியை ஆஸ்திரேலியா அணி அடைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அடுத்தப் போட்டியை வென்றால், வங்கதேசம் அணியின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக அமையும்.

