கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து கார்கள், இலகுரக மற்றும் கனரக லொரிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகங்கள்(எஃகு) மீதான அமெரிக்க இறக்குமதி வரியை 2027 ஜனவரி 1 முதல் 50 வீதமாக உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் வாகனங்களை உற்பத்தி செய்தால் பூஜ்ஜிய வீத வரியே விதிக்கப்படும் என்றும், கனடாவை இனி ஒரு மாநிலத்தைப் போல அமெரிக்கா நடத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த முறிவு
முன்னதாக முன்வைக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தில், கனடிய கார்கள் மற்றும் இலகுரக லொரிகள் மீதான வரியை 25 வீதத்திலிருந்து 15 வீதமாக குறைக்கவும், அலுமினியம் மற்றும் எஃகு மீதான வரியை 50 வீதத்திலிருந்து 25% வீதமாக குறைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், நடுத்தர மற்றும் கனரக லொரிகளுக்கான வரி விலக்குகள் உள்ளிட்ட பல கருத்து வேறுபாடுகள் காரணமாக வெள்ளிக்கிழமை அன்று பேச்சுவார்த்தை முறிந்தது.
அதனை தொடர்ந்து ஃபோர்டு, ஸ்டெல்லாண்டிஸ், ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் ஹோண்டா போன்ற முக்கிய நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிவைக் கண்டன.
கனடாவின் பதிலடி
இவ்வாறானதொரு பின்னணியில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, செப்டம்பர் 8 முதல் $20 பில்லியன் மதிப்பிலான சில அமெரிக்கப் பொருட்கள் மீது இறக்குமதி வரிகளை விதிக்க கனடாவும் முடிவு செய்துள்ளது.

இதேவேளை, அமெரிக்கர்கள் கனடாவின் இறையாண்மையை மதித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வர முடியும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

