Last Updated:
Trump | எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மெக்சிக்கோ மற்றும் கனடா மீதான கூடுதல் இறக்குமதி வரியை ஒரு மாதத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒத்திவைத்துள்ளார்.
கனடா, மெக்சிகோ நாட்டு பொருட்கள் மீது 25 விழுக்காடு வரி விதிக்கும் முடிவை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து, மெக்சிக்கோ மற்றும் கனடா மீதான கூடுதல் இறக்குமதி வரியை ஒரு மாதத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மெக்சிக்கோ, கனடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், மெக்சிக்கோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பானை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் தொடர்புகொண்டு நேற்று பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தை மிகுந்த நட்புரீதியாக நடைபெற்றதாக எக்ஸ் தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். மெக்சிக்கோ பொருட்கள் மீதான வரிவிதிப்பு ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இந்த காலக்கட்டத்தில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெய்ன்பான், அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், தங்களது நாட்டின் தேசிய பாதுகாப்புப் படையினர் 10 ஆயிரம் பேரை எல்லையில் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வை டிரம்ப் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, எல்லைப் பாதுகாப்பில் கூடுதல் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்ததாகவும், இதனைத் தொடர்ந்து புதிய வரிவிதிப்பு ஒரு மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
February 04, 2025 11:09 AM IST
Trump: கனடா, மெக்சிக்கோ நாட்டு பொருட்கள் மீது 25% வரி.. முடிவை தற்காலிகமாக நிறுத்திய டிரம்ப்..!