Last Updated:
மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி கனடா தேர்தலில் 165 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்தியா-கனடா உறவை மேம்படுத்தும்.
கனடா நாடாளுமன்றத்திற்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போதைய நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் அக்டோபர் மாதம் வரையில் உள்ளது. ஆனால் பணவீக்கம், பொருளாதார சுணக்கம், இந்தியாவுடனான மோதல் உள்ளிட்ட காரணங்களால் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ருடோ, கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்தார். பின்னர் பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி, முன்கூட்டியே தேர்தலை அறிவித்தார்.
இதன்படி திங்கள் கிழமை நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி 165 இடங்களைப் பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 172 இடங்களில் வெற்றி பெறாவிட்டாலும் அதிக இடங்களைப் பிடித்த கட்சியாக லிபரல் கட்சி உள்ளது.
லிபரல் கட்சிக்குப் பெரும் நெருக்கடி கொடுத்த கன்சர்வேடிவ் கட்சி, 145 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் மார்க் கார்னி மீண்டும் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். வெற்றிக் கூட்டத்தில் பேசிய மார்க் கார்னி, கனடா நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைக்க நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் எண்ணம் நிறைவேறாது எனக் கூறினார்.
ஜஸ்டின் ட்ருடோ பிரதமராக இருந்த போது நடந்த கருத்துக் கணிப்பில் ஆளும் லிபரல் கட்சி, கன்சர்வேடிவ் கட்சியை விட 20 சதவிகிதம் குறைவான ஆதரவைப் பெற்றிருந்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைந்துக் கொள்வேன் என அறிவித்தார். அப்போது பிரதமராகப் பதவியேற்ற மார்க் கார்னி, டிரம்புக்குக் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வந்தார். இதனால் கருத்துக் கணிப்பில் பின்தங்கிய கார்னி, இரண்டே மாதங்களில் எழுச்சி பெற்றுத் தேர்தலில் தனது கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கார்னியின் வெற்றிக்கு டிரம்பே காரணம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், காலிஸ்தான் ஆதரவு புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜக்மீத் சிங் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளார். ஜக்மீத் சிங் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற பர்னபி மத்திய தொகுதியில் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் 24 இடங்களைப் பிடித்திருந்த ஜக்மீத் சிங்-கின் கட்சி, தற்போது 7 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. இதன் காரணமாகக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார் ஜக்மீத் சிங்.
இந்தியாவுடன் முரண்பட்டு வந்த ட்ருடோவின் பதவி விலகல், ஜக்மீத் சிங்கின் தோல்வி ஆகியவை கனடா மற்றும் இந்தியா நாடுகளிடையேயான உறவைப் புதுப்பிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
April 29, 2025 8:53 PM IST


