“காடு இருந்தா எடுத்துக்குவானுங்க. ரூவா இருந்தா புடுங்கிக்குவானுங்க. படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது” – இது இந்தக் கால அசுரன் திரைப்படம். “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ – இது அந்தக் கால நறுந்தொகை பாடல். ஆக, எந்தக் காலமாக இருந்தாலும் கல்வி என்பது மிக மிக முக்கியம். கல்வியின் அவசியத்தைத் தன் செயலின் மூலம் உலகம் முழுக்க பறைசாற்றி இருக்கிறார் தென் கொரியா இளைஞர் ஒருவர்.
தசைநார் சிதைவு நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தென்கொரிய இளைஞர் ஜாங் இக்-சன். பேச்சு மற்றும் கண் அசைவு தவிர்த்து உடலின் மற்ற அனைத்து பாகங்களும் முடங்கிய நிலையில் முதுகலைப் பட்டம் வரை பெற்று, மாணவர்களுக்கு முன்னுதாரணமாக மாறி உள்ளார் ஜாங் இக்-சன்.

சமீபத்தில் தென்கொரியா நாட்டில் உள்ள குவாங்ஜு பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு பட்டமளிப்பு விழா ஒன்று நடந்தது. அந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகத் தலைவர் கிம் டோங்-ஜின், ஜாங் இக்-சன்னுக்கு முதுகலை பட்டம் வழங்கி பாராட்டினார். தற்போது 37 வயதாகும் ஜாங் இக்-சன் முதுகலைப் பட்டம் பெறுவதற்காக அவருடைய ஆய்வு அறிக்கையை அவரே அவருடைய கண் அசைவுகள் மூலம் டைப் செய்யும் கருவியை (Eye Tracking Mouse) பயன்படுத்தி டைப் செய்து சமர்ப்பித்துள்ளார்.

