இதேபோல அமெரிக்காவிலிருந்து பிரேசிலுக்கு நாடு கடத்தப்பட்ட அந்நாட்டு குடிமக்கள் கைவிலங்குடன் இருப்பதை கண்ட பிரேசில் நீதித் துறை அமைச்சர் ரிக்கார்டோ லெவன்டோவ்ஸ்கி, அமெரிக்காவுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். கைவிலங்குகளை உடனடியாக அகற்றச் செய்த அவர், “இது மனித உரிமைகளை வெளிப்படையாக புறக்கணிக்கும் செயல்’ என்று சாடினார்.
88 பிரேசில் குடிமக்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம் பெலோ ஹரிஸான்டே நகரத்தில் தரையிறங்குவதற்கு பதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மனாஸ் நகரத்தில் தரையிறங்கியது. பிரேசில் போலீஸாரின் தலையீட்டால் விமானத்தில் இருந்தவர்களின் கைவிலங்குகள் அகற்றப்பட்டுள்ளன.
மேலும் அங்கிருந்து பிரேசில் குடிமக்களை ‘கண்ணியத்துடன்’ பிரேசில் விமானப் படை விமானங்களின் மூலம் அழைத்து வர உத்தரவிட்டுள்ளார் பிரேசில் அதிபர் லுலா.
தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்களின் எதிர்வினை இப்படியென்றால், நாடாளுமன்ற அமளியின் போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பதிலையும் அலச வேண்டியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் ஜெய்சங்கர் பேசும்போது, “அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவது புதிதல்ல. 2009ஆம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது. தற்போது இந்தியா வந்து சேர்ந்த இந்தியர்கள் விஷயத்திலும் கடந்த கால நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று மிகவும் மேம்போக்கான பதிலை கொடுத்திருப்பதுதான் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் தொடர்பான விவாதத்துக்கு காரணமாக அமைந்தது.
நாடு கடத்தப்பட்டவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. மருந்துக்காகவாவது அமெரிக்காவின் இந்த செயலை கண்டித்திருக்கலாம் என்று கூறி பிரேசில், வெனிசுலா, கொலம்பியா நாடுகளுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை ஒருபக்கம் போய் கொண்டிருக்க, இதோ சட்டவிரோதமாக குடியேறிய 500 இந்தியர்களின் பட்டியலை அமெரிக்கா தயார் செய்து விட்டது. இவர்களும் விரைவில் நாடு கடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படியான சூழலில் இனி வரும் விமானங்களிலாவது இந்தியர்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடத்தப்படவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.!