கடந்த 2024 ஆம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து அழகி பட்டத்தை வென்றவர் தான் இந்த மில்லா மேகி. இதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டிக்கு தேர்வாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்கேற்றவர் திடீரென பாதியிலேயே வெளியேறியதால், அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மில்லா மேகி தானாகவே வெளியேறினாரா? அல்லது வெளியேற்றப்பட்டாரா? நடந்தது என்ன?
மிஸ் வேர்ல்டு எனப்படும் உலக அழகி போட்டி, 1951 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தியாவின் ரீட்டா ஃபாரியா, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா வரிசையில், கடைசியாக மானுஷி சில்லர் மகுடம் சூடினார். இதுவரை நடைபெற்ற மிஸ் வேர்ல்டு போட்டியில் இந்தியா சார்பில் 6 பேர் மகுடத்தை அலங்கரித்துள்ளனர். தற்போது, 72 ஆவது உலக அழகி போட்டி தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.
இந்தியாவில் களைகட்டியுள்ள மூன்றாவது மிஸ் வேர்ல்டு காம்பெடிஷன், வருகின்ற 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றுள்ளனர். இங்கிலாந்து சார்பில், கடந்த 2024 ஆம் ஆண்டு மிஸ் இங்கிலாந்து பட்டம் வென்ற மில்லா மேகி கலந்து கொண்டார். 24 வயதான இவர், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐதராபாத்தில் உலா வந்தார். ஆனால், திடீரென கடந்த 16 ஆம் தேதி போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார்.
முதலில், சொந்த காரணங்களுக்காக விலகுவதாக இங்கிலாந்து நிர்வாகிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில், மில்லா மேகி தான் பாதியிலேயே விலகும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறி குண்டை தூக்கிப் போட்டுள்ளார். ஒவ்வொரு சுற்றின் போதும் காலையிலும், மாலையிலும் அசவுகரியம் ஏற்படுத்தும் உடைகளை அணிய போட்டி ஏற்பாட்டாளர்கள் கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார். குறிப்பாக, பிரபலங்களை மகிழ்விக்கும் வகையில் அணிவகுப்பு ஒத்திகைகள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து, கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதால் போட்டியில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது அல்லது தன்னை நிராகரிப்பார்கள் என்று உணர்ந்ததால் பாதியிலேயே விலகியதாக விளக்கம் அளித்துள்ளார். மிஸ் இங்கிலாந்து அழகியான மில்லா மேகி, தான் விலகியதற்கான காரணம் குறித்து கூறியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், மில்லா மேகிக்குப் பதில் மிஸ் இங்கிலாந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்திருந்த சார்லோட் கிராண்ட் பங்கேற்றுள்ளார். 25 வயதான இவர், மிஸ் லிவர்பூல் மகுடம் சூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத்தில் நடைபெறும் உலக அழகி போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், மிஸ் இங்கிலாந்து அழகி மில்லா மேகி கூறிய குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Hyderabad,Hyderabad,Telangana
“கண்ணியக்குறைவாக நடத்தியதால் விலகல்” – மிஸ் இங்கிலாந்து அழகிக்கு நடந்தது என்ன?.. சர்ச்சையில் 2025 உலக அழகி போட்டி!

