Last Updated:
பெங்களூருவில் 100 கிராம் நகைகளுக்காக மர்ம நபர் நிகழ்த்திய வெறிச்செயலின் திடுக்கிடும் பின்னணி என்ன?
பெங்களூரு அருகே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர் கண்முன்னே மனைவி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 100 கிராம் நகைகளுக்காக மர்ம நபர் நிகழ்த்திய வெறிச்செயலின் திடுக்கிடும் பின்னணி என்ன?
பெங்களூரு நெலமங்களாபேட்டை வீதியில் வசித்துவந்தவர் 60 வயதான ஷோபா. இவருடைய கணவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பக்கவாத நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாமல் சக்கர நாற்காலியிலேயே முடங்கிக் கிடந்தார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், ஷோபா தனது கணவரை மிகவும் அன்புடன் கவனித்து வந்தார். சம்பவத்தன்று ஷோபா வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். ஷோபாவிடம் தண்ணீர் கேட்பதுபோல் நடித்து வீட்டிற்குள் புகுந்துள்ளார். அப்போதுதான் அந்தக் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஷோபா எதிர்பாராத நேரத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷோபாவின் கழுத்தை அந்த நபர் கொடூரமாக அறுத்துள்ளார். தன் கண்முன்னே மனைவி ரத்த வெள்ளத்தில் துடிப்பதைக் கண்டும், உடல் நலம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் இருந்த கணவரால் அவரைக் காப்பாற்றவோ அல்லது உதவிக்கு ஆட்களை அழைக்கவோ முடியாமல் போனது நெஞ்சைப் பிளக்கும் சோகமாக அமைந்தது.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில், பட்டப்பகலில் நடந்த இந்தக் கொடூரக் கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


