கோலாலம்பூர்:
கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட பெண்ணை கத்தரிக்கோலால் கடுமையாக தாக்கி அவர் மீது மிளகாய்ப்பொடியை அப்பியதை ஒப்புக்கொண்ட இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சக நாட்டுப் பெண்ணை தாக்கிய 41 வயது இணைய வர்த்தகர் எர்னாவதி மீது கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்தது.
கடந்த அக்டோபர் 7ல் தாக்கப்பட்ட 43 வயது தியா அயு குரினியாசரி, உணவக ஊழியர் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் தாக்கியவரின் கணவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்டது.
காரில் அந்த இரண்டு பெண்களும் இது குறித்துப் பேசி வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
வாக்குவாதம் மோசமடைய எர்னாவதி, நண்பர் ஒருவரை தியாவை இறுகப் பிடிக்கச் சொல்லி இருக்கிறார். தியாவின் முகத்தில் எர்னாவதி மிளகாய்த் தூளை அப்ப ஆரம்பித்தார்.
முகம், உடல், கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் அந்தப் பெண்ணை எர்னாவதி, ஆத்திரத்துடன் கத்தியால் குத்திக் காயப்படுத்தினார்.
எர்னாவதிக்கு ஐந்து பிள்ளைகள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவரது செயல்கள் ஈவிரக்கமற்றவை எனச் சாடிய அரசுத்தரப்பு வழக்கறிஞர், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனையை விதிக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.




