கோத்தா பாரு, பிப்ரவரி 15, 2026:
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் உட்பட 17 முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் உட்பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஹம்சா சைனுடின் சரியான பாதையில் செல்வதாகவும், பெர்சத்து கட்சியை வழிநடத்த அவர் தகுதியானவர் என்றும் கிளிர் கூறியுள்ளார்.
முஹிடின் யாசின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ‘சத்தியப் பிரமாணத்தில்’ (Statutory Declaration – SD) கிளிரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“என்னை கட்சியிலிருந்து நீக்கினால் அது அவர்களின் விருப்பம். இராணுவத்தில் இருந்த காலத்திலிருந்தே நான் உண்மையான பாதையைப் பின்பற்றவே பழகியிருக்கிறேன். ‘லாலாங்’ புல்லைப் போலத் தள்ளாட மாட்டேன்” என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கட்சி ஒழுக்கத்தை மீறியதாகக் கூறி, ஹம்சா சைனுடின், வான் அஹ்மட் ஃபைசல் (மாச்சாங் MP), அசாரி ஹசான் (பாடாங் ரெங்காஸ் MP) உள்ளிட்ட 17 பேரை முகிதின் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை வாரியம் நீக்கியுள்ளது.
கட்சியின் ஒற்றுமையைக் காக்கவும், ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும் இந்த ‘வலியைத் தரும்’ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முஹிடின் யாசின் விளக்கமளித்துள்ளார்.
ஹம்சா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் முழு அதிகாரமும் முஹிடின் யாசினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹம்சா சைனுடின், தாம் ஒரு “சுயேச்சை” (Independent) நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படப்போவதாகவும், நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். மேலும், 25 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர் தன் பக்கம் இருப்பதாக அவர் உரிமை கோரியுள்ளது பெர்சத்து கட்சியில் பெரிய பிளவு ஏற்படுவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
The post “கட்சியிலிருந்து நீக்கினாலும் கவலை இல்லை”: முஹிடினை விமர்சித்து ஹம்சாவை ஆதரிக்கும் கெத்தேரே MP! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

