Last Updated:
விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும், கேப்டன ஹேரி ப்ரூக் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் அணியாக இங்கிலாந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
குரூப் 2 வில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி இலங்கையின் பல்லிகெலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் சைம் அயுப் 7 ரன்களிலும், சல்மான் அகா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பாபர் ஆசம் மற்றும் பகர் ஜமான் தலா 25 ரன்களில் வெளியேற சதாப் கான் 23 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சகிப்சதா பர்கான் அரைச்சதம் கடந்து 63 ரன்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 164 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்தில் தொடக்க வீரர் பிலிப் சால்ட் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ஜேக்கப் பெதேல் 8 ரன்களும், டாம் பான்டன் 2 ரன்களும் எடுத்தனர்.
சாம் கரன் 16 ரன்களும், வில் ஜாக்ஸ் 28 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும், கேப்டன ஹேரி ப்ரூக் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
51 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர் 10 பவுண்டரியுடன் 100 ரன்கள் எடுத்தார். 19.1 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 166 எடுத்து வெற்றி பெற்றது.
Feb 24, 2026 11:16 PM IST


