Last Updated:
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தற்போதைய அரசின் மிகப்பெரிய சாதனை- ராஜ்நாத் சிங்
பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அந்நாடு தொடர்ந்து பயங்கரவாதத்தை ஆதரித்து வருவதை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
ஹைதராபாத்தில் தெலங்கானா பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய அவர், அமைதி மற்றும் நல்லிணக்க மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு இந்தியா தகுந்த முறையில் பதிலடி கொடுக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார். மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளுக்கு சிந்து நதியின் நீர் ஒருபோதும் சென்றடைய அனுமதிக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1960-ல் கையெழுத்தான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்துப் பேசிய ராஜ்நாத் சிங், “பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் கண்ணீர் இன்னும் காயாத நிலையில், எதிரிகள் எங்களிடமிருந்து தண்ணீரை எதிர்பார்க்கக் கூடாது. ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது” என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை முன்மொழிந்தார். பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கான ஆதரவை முற்றிலும் நிறுத்தும் வரை இந்த ஒப்பந்த நிறுத்தம் தொடரும் என்றும் அவர் கூறினார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாடு ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியின் கடந்த 12 ஆண்டுகால சாதனைகளைப் பட்டியலிட்ட அமைச்சர், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தற்போதைய அரசின் மிகப்பெரிய சாதனை என்றார். முன்பு பயங்கரவாதத்தோடு ஒப்பிடப்பட்ட காஷ்மீர், இன்று சுற்றுலா, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளில் பெரும் வளர்ச்சி கண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
ஸ்ரீநகரின் லால் சௌக்கில் தேசியக் கொடி ஏற்றுவது, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மொஹரம் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவது, தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டது என காஷ்மீர் இன்று அமைதிப் பாதைக்குத் திரும்பியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஜிஎஸ்டி அமலாக்கம், நாடு தழுவிய மின்மயமாக்கல் மற்றும் நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.


