Last Updated:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் பகுதி அமளியில் முடிவடைந்தது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நிறைவடைந்த நிலையில், இரு அவைகளும் மார்ச் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது. ஏப்ரல் 2ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல் பகுதி கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அதாவது, இந்தியா- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், முன்னாள் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனேவின் வெளியிடப்படாத சுயசரிதை புத்தகத்தில் இடம்பெற்ற கருத்துகள் உள்ளிட்டவற்றை எதிர்க்கட்சிகள் முன்வைத்து இரு அவைகளிலும் முழக்கமிட்டனர். எனினும், இரு அவைகளிலும் தொழில்துறை உறவுகள் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் இரு அவைகளும் முடங்கின. இதனைத் தொடர்ந்து, முதல் பகுதி நிறைவடைந்து, மார்ச் 9ஆம் தேதிக்கு இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் பெயர் இடம் பெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

