கடவுளையே பீதியில் உறையச் செய்துவிடும் அளவுக்கு கொடூரமாக இரண்டு பேரை கொலை செய்துவிட்டு, கடவுளை சாந்தப்படுத்துவதற்காக கொலை செய்ததாக கொலையாளி கூறியிருப்பதுதான் இதில் ஹைலைட்.
இரண்டு பெண்களை கழுத்தறுத்து கொலை செய்தால்தான் சாந்தமடைவேன் என்று, நான் எப்போதடா சொன்னேன் மானிடனே? என கடவுளே இறங்கிவந்து கேள்வி எழுப்பினால்கூட திருந்தப்போவதில்லை இந்த பில்லி சூனியக் கும்பல். கடவுள் பேரைச் சொல்லி 2 பெண்களை தீர்த்துக் கட்டிய கொலையாளி கூறிய பகீர் வாக்குமூலம் என்ன?
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில், அதர்வா என்ற கிராமத்தில் வசிப்பவர் 21 வயதான சத்ரபதி சிங். தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட இவரது மனைவி சமீபத்தில்தான் கர்ப்பமாகியுள்ளார். தாயும்-சேயும் நலமாக இருந்து வந்தநிலையில், திடீரென சத்ரபதி சிங்கின் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் நொந்துபோன சத்ரபதி மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.
கடவுளே எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனையைக் கொடுக்கிறாய்? என அவர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்திருக்கிறார். ஆனால், வழக்கம்போல் எந்த பதிலும் அவருக்கு கிடைக்காததால் கடவுள் தன்மேல் மிகுந்த கோபத்தில் இருப்பதாக நினைத்திருக்கிறார். அவரை எப்படியாவது சாந்தப்படுத்த வேண்டும் என நினைத்த சத்ரபதி சிங் தனது வீட்டில் பூஜை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
பூஜைக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி தடபுடலாக ஏற்பாடுகளை செய்தவர், நரபலி கொடுத்தால்தான் கடவுள் சமாதானமடைவார் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார். யாரை நரபலி கொடுப்பது என யோசித்தபோது பக்கத்து வீட்டில் வசித்துவந்த உறவினர்களான 50 வயதான குமாரிசிங் மற்றும் 65 வயதான கமலா சிங் ஆகியோர் கண்ணில் பட்டுள்ளனர். அவர்கள்தான் 50 வருடங்களை கடந்து வாழ்ந்துவிட்டார்களே, அவர்களை பலி கொடுத்துவிட வேண்டியதுதான் என்கிற முடிவை எடுத்திருக்கிறார்.
அதன்படி சம்பவத்தன்று தனது வீட்டில் நடைபெறும் பூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். வீட்டிற்கு வந்த இருவரையும் சத்ரபதி சிங், தடபுடலாக கவனித்திருக்கிறார். தேங்காய், அகர்பத்தி என ஜண்டா பூஜையைப் போல் திகிலாக பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கத்தியை எடுத்துக் கொண்டு தயாரானார் சத்ரபதி.
பெரும் திகிலுடன் பூஜையில் அமர்ந்திருந்த பெண்களுக்கு பின்னால் கத்தியுடன் வந்த சத்ரபதி, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களது கழுத்தை சரக் சரக் என அறுத்துள்ளார். ரத்தம் தெறிக்க அவர்கள் இருவரும் அலறித் துடிக்க சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் வசித்துவந்த ராஜ்பஜன் சிங் மற்றும் சுமித்ரா சிங் ஆகியோர் ஓடி வந்து தடுக்க முயன்றுள்ளனர்.
படுகாயமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இருவரையும் மீட்ட போலீசார், அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். கொலை செய்யப்பட்ட பெண்கள் இரண்டு பேரின் தலையும் துண்டாக்கப்பட்டு கிடந்தன. உடல்களின் அருகில் தேங்காய், அகர்பத்தி மற்றும் பூஜைப் பொருட்கள் கிடந்தன. போலீசார் சிங்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த யாரோ தனக்கு பில்லி சூனியம் வைத்திருப்பதாகக் கருதி, இக்காரியத்தை சிங் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
