புதுடெல்லி: பாகிஸ்தானின் 2-வது பெரிய கடற்படை தளம் மீது தாக்குதல் நடத்த முயன்ற 4 பேரை அந்நாட்டு ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் துர்பத் நகரில் பிஎன்எஸ் சித்திக் கடற்படை தளம் அமைந்துள்ளது. அங்கு சீனாவின் ட்ரோன்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிஎன்எஸ் சித்திக் கடற்படை தளத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 4 மர்ம நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட கடற்படை வீரர்கள் ஊடுருவல் முயற்சியை முறியடித்துள்ளனர்.
இதுகுறித்து இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன் (ஐஎஸ்பிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிஎன்எஸ் சித்திக் கடற்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்ததீவிரவாதிகள் முயற்சி செய்தனர்.இதையடுத்து, உஷாரான கடற்படையினர், அருகில் இருந்த பாதுகாப்புப் படையினரை வரவழைத்தனர். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு வீரரும் அனைத்து (4) தீவிரவாதிகளும் உயிரிழந்தனர். இதன்மூலம் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.
பிஎல்ஏ பொறுப்பேற்பு: இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி (பிஎல்ஏ) என்ற பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தான் பகுதியை தனி நாடாக அறிவிக்கக் கோரி இந்த அமைப்பு போராடி வருகிறது. குறிப்பாக இப்பகுதியில் சீனா முதலீடு செய்வதை எதிர்க்கும் வகையில் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பிஎல்ஏ பிரிவினைவாத அமைப்பு இந்த ஆண்டில் நடத்தும் 3-வது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்னதாக கடந்த 20-ம் தேதி சீனாவின் நிதியுதவியால் செயல்படும் க்வதார் துறைமுகத்துக்கு வெளியே உள்ள ராணுவ புலனாய்வு தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பிஎல்ஏ அமைப்பினருக்கும் இடையே நடந்த சண்டையில் 2 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு ஜனவரி 29-ம் தேதி மாக் நகரில் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வடமேற்கு பாகிஸ்தான் பகுதி வழியாக நேற்றுவந்த சீன பாதுகாப்பு வாகனங்கள் மீது தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் 5 சீனர்கள் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.