சென்னை: நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்தின் கடன் அளவு வரம்புக்குள் இருப்பதாக தெரிவித்துள்ள மாநில நிதித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன், தமிழகத்தின் கடன் ரூ.9 லட்சம் கோடியாக உள்ளது என்றும், நடப்பாண்டு ரூ.1.05 லட்சம் கோடி வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் 2025 தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சென்னை – தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நிதித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் கூறியது: “நாட்டின் பொருளாதாரத்தில் 9 சதவீதத்தை தமிழக அரசு பங்களிப்பு செய்கிறது. பொருளாதார ரீதியாக தேசிய சராசரியைவிட அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம்.
பொருளாதாரத்தில் 28 சதவீதத்துக்கு கீழ் ஒரு மாநிலம் கடன் வாங்க நிதிக்குழு பரிந்துரைக்கிறது. அந்த வரம்புக்குள் தான் கடன் வாங்குகிறோம். தொகையை பார்க்கும்போது முதலிடத்தில் இருப்பதாக தோன்றும். ஆனால் பொருளாதாரத்துக்கு ஏற்ப கடன் வாங்கும் விஷயத்தில் மோசமான நிலையில் இல்லை. ரூ.10 ஆயிரம் ஊதியம் பெறுவோர் ரூ.5 ஆயிரம் கடன் வாங்குவதும், ரூ.1 லட்சம் பெறுவோர் அதே தொகையை கடன் வாங்குவதற்குமான வித்தியாசம் தான்.
தேவையான நேரத்தில் நிதி ஒதுக்குகிறோம். துறைகளுக்கு விடுவிக்கப்பட்டு பயன்படுத்தாத நிதி ரூ.11 ஆயிரம் கோடியை திரும்பப் பெற்றுள்ளோம். இவ்வாறான நிதி மேலாண்மை மூலம் கடந்த ஆண்டு ரூ.3,600 கோடி குறைவாக கடன் வாங்கியுள்ளோம். நடப்பாண்டு ரூ.7 ஆயிரம் கோடி குறைவாக கடன் வாங்குவோம். தமிழக அரசின் கடன் ரூ.8 லட்சம் கோடி முதல் ரூ.9 லட்சம் கோடி வரை இருக்கும். வரும் நாட்களில் ரூ.1.05 லட்சம் கோடி கடன் வாங்கவிருக்கிறோம். இது குறைய வாய்ப்புள்ளது.
கடன் வாங்கும் வளர்ச்சி என்பது 0.66 சதவீதம் என்றளவில் தொடர்கிறது. வருவாய் பற்றாக்குறை தொடர்ந்து குறைந்து 2025 – 26-ஆம் ஆண்டில் 1.17 சதவீதமாக இருக்கும். கடந்த ஆண்டு ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையாக மதிப்பிடப்பட்டு, மத்திய அரசிடம் நலத்திட்ட உதவிகள் வராதபோதே நடப்பாண்டு ரூ.3 ஆயிரம் கோடி குறைத்திருக்கிறோம். இது மேலும் ரூ.41 ஆயிரம் கோடி அளவு குறையும். ஜல்ஜீவன் உள்ளிட்ட திட்டங்களில் நினைத்தளவு தொகை வரவில்லை. அது கிடைத்திருந்தால் வருவாய் பற்றாக்குறை மேலும் குறைந்திருக்கும்.
மூலதன செலவு ரூ.46 ஆயிரம் கோடியாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு ரூ.57 ஆயிரம் கோடி செலவிட முடியும் என்று நம்புகிறோம். மாநிலத்துக்கு 75 சதவீதம் சொந்த வரி வருவாய், 24.7 சதவீதம் மத்திய அரசிடம் பெறுகிறோம். இதில் மத்தியில் இருந்து நிதி குறைவாக வருவதை அனைவரும் அறிவோம். நாட்டின் சராசரி ஜிஎஸ்டி வளர்ச்சியை ஒப்பிடும்போது, தமிழகத்தின் ஜிஎஸ்டி வளர்ச்சி அதிகம். மோட்டார் வாகன வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக் வருவாய் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் சேவையில் சிறப்பு கவனம் செலுத்தவிருக்கிறோம். செமி கண்டக்டர் துறையில் வடிவமைப்பு, பரிசோதனை உள்ளிட்ட எந்த பிரிவில் கவனம் செலுத்தலாம் என ஆலோசித்து வருகிறோம். 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் வகையில் வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்துகிறோம். எனினும், இதில் உலகளாவில் ஏற்படும் மாற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு ரூ.2,152 கோடியை தராத போதும் எந்த குறையுமின்றி பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். மிகப் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த வேண்டியிருப்பதால் மூலதன செலவு அதிகமாக இருக்கிறது. வரி வருவாய் பகிர்வில் நமக்கான சதவீதத்தில் உயர்வு ஏற்பட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும். கரோனா நேரத்தில் செமி கண்டக்டர் சிப்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் மடிக்கணினி கொடுக்கவில்லை. தற்போது கொள்கை முடிவு எடுத்து மீண்டும் வழங்குகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.