சிங்கப்பூருக்கு நாய்க்குட்டியை கடத்திச் சென்ற இந்திய வம்சாவளி ஆடவருக்கு நேற்று (15 ஏப்ரல்) எட்டு வார சிறைத்தண்டனையும், 2,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
43 வயதான மகேந்திரன் கணேசன் என்ற அந்த மலேசிய ஆடவர் தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதாவது மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர், சலவை பையில் மறைத்து வைத்து நாய்க்குட்டியை கடத்திச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.
முறையான அனுமதி உரிமம் இல்லாமல் விலங்கை இறக்குமதி செய்ததற்கான ஒரு குற்றச்சாட்டும், அதன் உரிமையாளராக அதை பாதுகாக்கும் கடமையை மீறிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. மற்றொரு குற்றச்சாட்டு தண்டனையின் போது பரிசீலிக்கப்படுவதாகவும் என்று சேனல் நியூஸ் ஆசியா செய்தி தளம் கூறியுள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று, துவாஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகள் (ICA) சோதனையில் ஈடுபட்ட போது அவர் பிடிபட்டார்.
உயிருள்ள நாய்க்குட்டியை சலவை பையின் உள்ளே மறைத்து வைத்த மகேந்திரன், அதனை வாகனத்தின் உதிரி டயர் பெட்டியில் மறைத்து கொண்டு வந்தததை ICA அதிகாரிகள் கண்டறிந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவ மகேந்திரன், மலேசியாவில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் என்று நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
அடையாளம் சொல்லப்படாத ஒருவரிடமிருந்து மகேந்திரன் கொஞ்சம் பணத்தைக் கடன் வாங்கியிருந்தார் என்றும், அதனை அடைக்க மலேசியாவிலிருந்து விலங்குகளை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் கொண்டு வந்து தரும்படி கடன் கொடுத்தவர் வேலை வழங்கியதாகவும் கூறப்பட்டது.

