கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு வலுவான எதிர்க்கட்சி இல்லை என்றும், இது தனது இதயத்தில் வலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நியூஸ் 18 குழுமத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, எதிர்க்கட்சிகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியால் தன்னை எதிர்கொள்ள முடியவில்லை என்றும், இதனால், கடந்த 10 ஆண்டுகளில் தனக்கு வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்றும் தெரிவித்தார்.
”ஜனநாயகத்தில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இருப்பது மிகவும் அவசியம். அது ஒரு அரசாங்கம் சிறப்பாக நடைபெற மிகவும் முக்கியம். 2014 முதல் 2024 வரை வலுவான எதிர்க்கட்சி கிடைக்க வேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால், அது நடக்கவில்லை. எனவே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். என் வாழ்க்கையில் ஒரு நல்ல எதிர்க்கட்சி மட்டுமே விடுபட்டுவிட்டது” என்று பிரதமர் மோடி பேட்டியளித்தார்.
60 ஆண்டுகளாக அரசாங்கத்தை நடத்தி வந்தவர்களிடம் இருந்து பல்வேறு ஆலோசனை பெறுவதற்கு நினைத்ததாகவும், ஆனால், காங்கிரசிடம் இருந்து தனக்கு சாதகமான பங்களிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிரணாப் முகர்ஜி இருந்தவரை, அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டதால், அதனால் நான் பயனடைந்தேன். ஆனால், எதிர்க்கட்சிகளிடம் இருந்து எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். எனவே சக கட்சி சகாக்கள் மற்றும் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கிடைத்த அனுபவத்தில் இருந்தே தான் அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
அரசியலுக்காக அவர்களை எதிர்த்தாலும், நாட்டின் நலனுக்காக சில முடிவுகளை எடுக்க அவர்களை எதிர்பார்த்ததாக கூறிய மோடி, இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சி, விழிப்புணர்வுள்ள எதிர்க்கட்சி அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றும் தெரிவித்தார். ”குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. இப்போது சரியில்லை எனவே, எனது இதயத்தில் ஒரு வலி இருக்கிறது. என்னை 20 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சில பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் பேய் போன்று சித்தரிக்கப்பட்டேன். ஆனாலும் நான் அமைதியையும், பொறுமையையும் இழக்கவில்லை” என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பொதுவாழ்வில் பேசும்போது கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், ஒருவரை விமர்சிக்கலாம் என்றாலும், நல்ல முறையில் விமர்சிக்க வேண்டும். ஆனால், இந்தியா கூட்டணியில் அவ்வாறான நிலை இல்லை என்றும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
