Last Updated:
கடத்தப்பட்ட 4 வயது சிறுமியை கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு மும்பை போலீசார் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மும்பை காவல்துறை, CSMT-ஃபோர்ட் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட 4 வயது சிறுமியை கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு, அவளது பெற்றோருடன் மீண்டும் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தேடுதல் நடவடிக்கையில் 50 அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அந்தக் குழந்தையானது தனது தந்தையின் சிகிச்சைக்காக சோலாப்பூரில் இருந்து தனது பெற்றோர் மற்றும் கைக்குழந்தை சகோதரனுடன் செயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு வந்திருந்தது. மே 20 ஆம் தேதி மும்பையின் CSMT ரயில் நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனது. குழந்தை காணாமல் போனதை அடுத்து அவரது பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
புகாரை அடுத்து குழந்தையை கண்டுபிடிக்க 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. ஃபோர்ட் பகுதி, லோக்மான்ய திலக் டெர்மினஸ் மற்றும் பூசாவல் ஆகிய இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் குழந்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். முதலில் ஃபோர்ட் நிலைய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குழந்தையுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்வதை கண்டனர்.
கடத்தல்காரன் தாதருக்குச் செல்லும் உள்ளூர் ரயிலில் ஏறி, குர்லாவில் இறங்கி லோக்மான்ய திலக் டெர்மினஸை (LTT) அடைந்ததும், அங்கிருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசிக்குச் செல்லும் ரயிலில் சிறுமியை அழைத்துச் சென்றதைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சிறப்புக் குழுக்கள் உடனடியாக உத்தரப்பிரதேசத்திற்கு விரைந்தனர்.
ஆரம்பத்தில் சிறுமியை கண்டுபிடிக்க மும்பை காவல்துறை குழு வாரணாசிக்கு பல முறை சென்றதாகவும், அங்கு வாரணாசி காவல்துறை மற்றும் ஜிஆர்பியின் ஒத்துழைப்புடன் தேடியபோதிலும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று டிசிபி முண்டே கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம், மும்பை காவல்துறை பல குழுக்களை நியமித்ததுடன் வாரணாசியில் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் செய்தித்தாளில் விளம்பரங்களை வெளியிட்டு ஆபரேஷன் ஷோத் என்ற திட்டத்தைத் தொடங்கினர். இந்நிலையில், ஒரு உள்ளூர் பத்திரிகையாளர், மும்பை குழுவிடம் ஒரு அனாதை இல்லத்தில் மராத்தி பேசும் சிறுமி இருப்பதாக தெரிவித்தார். பின்னர் காவல்துறையினர் அந்தப் பெண் குழந்தை பற்றிய அடையாளத்தை பகிர்ந்து கொண்டனர்.
அனாதை இல்ல ஊழியர்கள், மும்பையில் அந்த சிறுமி கடத்தப்பட்டதை அறியாமல், அவளுக்கு “காஷி” என்று பெயரிட்டனர். இதனையடுத்து மும்பை காவல்துறை குழு ஒன்று அனாதை இல்லத்திற்கு சென்று சிறுமியின் அடையாளத்தை உறுதி செய்தது. பின்னர் அவரது பெற்றோரை தொடர்பு கொண்டதாகவும், வீடியோ கால் மூலம் அவர் சிறுமியை அடையாளம் காணப்பட்டதாகவும் அதிகாரி கூறியுள்ளார்.
பெற்றோரால் அடையாளம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததாகவும் அதிகாரி கூறியுள்ளார். கடத்தல்காரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடத்தல்காரன் சிறுமியை வாரணாசி ரயில் நிலையம் அருகே விட்டுச் சென்றதாகவும், சிறுமி தனியாக இருப்பதைக் கண்ட உள்ளூர் போலீசார் அவளை அனாதை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Mumbai,Maharashtra
November 15, 2025 7:01 PM IST
கடத்தப்பட்ட சிறுமியை மீட்ட மும்பை போலீஸ்…! 6 மாதங்களுக்குப் பின்னர் பெற்றோரிடம் சேர்ந்த நெகிழ்ச்சி தருணம்…


