Last Updated:
17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது ஆர்சிபி அணி.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை அணியை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது ஆர்சிபி.
சென்னை சேப்பாக்கத்தில் தோனியையும் கோலியையும் ஒரே போட்டியில் பார்ப்பதற்காகவே பல ஆயிரம் பேர் ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக்கொண்டு மைதானத்தை நோக்கி நேற்று மாலை படையெடுத்தனர்.
நம் ஆசை நாயகர்களை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் பல ஆயிரங்களை செலவு செய்து ரசிகர்கள் சென்ற நிலையில் சென்னை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் சுமாராக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், ஒரு கட்டத்தில் RCB கேப்டன் ரஜத் படிதாரின் 3 கேட்ச்களை கோட்டை விட்டதால் பெரிய விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டது. பந்துவீச்சு ஓரளவு சுமாராக இருந்த போதிலும் வழக்கம் போல 43 வயது இளம் வீரர் தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தார்.
19 ஆவது ஓவரில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்காத குட்டி மலிங்கா பதிரானா, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபிக்கு அதிர்ச்சி அளித்தார். அதேபோல் கடைசி ஓவரை சுட்டிக்குழந்தை சாம் கரன் வீசியபோது, இறக்கமே இல்லாமல் ஹாட்ரிக் சிக்சர் விளாசி அணியின் ஸ்கோரை 196-ல் கொண்டு சென்று விட்டார், டிம் டேவிட்.
197 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடிக்க முயன்ற சிஎஸ்கே வீரர்களுக்கு தொடக்கத்திலேயே காத்திருந்தது அதிர்ச்சி, 10 ரன்களுக்கு உள்ளாகவே கேப்டன் கெயிக்வாட், ராகுல் திரிபாதி ஆகியோர் நடையை கட்ட, சென்னை அணியின் ஆரம்பமே ஆட்டம் கண்டது.
இதையும் படிக்க: காலில் விழ ரசிகருக்கு பணம் கொடுத்தாரா ரியான் பராக்? சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்..!
ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் போக்கை ஷிவம் துபே மாற்றியதும் சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறக்க, அவரும் பாதியில் கிளம்பிவிட்டார். வழக்கம்போல கடைசி பிரம்மாஸ்திரமாக களமிறங்கிய தோனி, அணியை மீட்க போராடியதுடன், வந்திருக்கும் ரசிகர்களை குஷி படுத்த 2 சிக்சர்களை பறக்கவிட்டார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 146 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தனர்.
கஜினி முகமது போல படையெடுத்த ஆர்சிபி 17 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கத்தில் சென்னை அணியை வீழ்த்தி வரலாறு படைத்ததால் அதன் ரசிகர்கள் குஷியடைந்தனர்.
நேற்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த நிலையில், அடுத்த போட்டி நாளை அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற இருக்கிறது. அந்த போட்டியில் ராஜஸ்தான் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது.
March 29, 2025 7:21 AM IST


