Last Updated:
“தற்போது போர் ஏற்பட்டுள்ளதால் இந்த நீரிணை வழியாக கப்பல்கள் சென்று வருவது என்பது பெரும் சிரமத்தை சந்தித்திருக்கிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திவரும் போரால் உலக அளவில் பொருளாதார சிக்கல் ஏற்படும் அபாயம் இருந்துவருகிறது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் கச்சா எண்ணெய், மூலப் பொருட்கள் உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை இருந்து வரும் சூழலில், பெட்ரோல், டீசல் பிரச்சினை இதுவரை வரவில்லை. இந்தச் சூழலில் மேற்கு ஆசியா போர் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தற்போது ஏற்பட்டுள்ளது மிகவும் இக்கட்டான சூழல். ஆனாலும் கூட அரசு இயந்திரத்தின் அத்தனை சக்கரங்களும் சுழன்று சுழன்று வேலை பார்க்கிறது.
இந்த இக்கட்டான சூழலில் அரசுடன் மக்களும் துணை நிற்க வேண்டும். ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டது என்பது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மூடப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது போர் ஏற்பட்டுள்ளதால் இந்த நீரிணை வழியாக கப்பல்கள் சென்று வருவது என்பது பெரும் சிரமத்தை சந்தித்திருக்கிறது. ஆனாலும் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளுடன் பேசி இந்தியாவிற்கான கப்பல்கள் தொடர்ந்து வருவதை உறுதி செய்து இருக்கிறோம்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா எதிர்ப்பை பதிவு செய்கிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அமெரிக்காவுடன் இந்தியா பேசி வருகிறது. கச்சா எண்ணெய் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. போர் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சந்திக்க அனைவரும் தயாராக வேண்டும்” இவ்வாறு பேசினார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், சில விளக்கங்களை கோரி பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். மாநிலங்களவைத் தலைவர் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


